ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் பட்டுவாடா தொடர்பாக தொடர்ந்து புகார் எழுந்துள்ள நிலையில், தேர்தலை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு தேர்தல்- பிரச்சாரம் தீவிரம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவும், தேமுதிக சார்பாக ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட 77 பேர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். தேர்தல் ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதியோர் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வாக்குச்சாவடி மையமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என திமுகவும், அதிமுகவும் போட்டி போடுகின்றன.
undefined
ஓட்டுக்கு பணம்- குவியும் புகார்
இதனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ஆட்சிக்கு மக்கள் வழங்கக்கூடிய மதிப்பெண் என்ற அடிப்படையில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. அதிமுகவை பொருத்தவரை கொங்கு மண்டலம் தங்களது கோட்டையென நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு குடும்பத்தில் உள்ள மொத்த ஓட்டுக்கு பணமாகவோ. தங்க நகையாகவோ வழங்குவதற்கு அதிமுக- திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குக்கர், வெள்ளி கொலுசு, கோழிக்கறி என பல்வேறு பரிசுகளை திமுக, அதிமுக தரப்பில் தாராளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய பார்வையாளர்
மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருபவர்களை காலையில் இருந்து மாலை வரை ஷாமியானா பந்தல் போட்டு அடைத்து வைத்து 3 வேளை சாப்பாடும், பணமும் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பார்வையாளர் தேர்தல் ஏற்பாடுகளை நேரடியாக பார்வையிட்டு வருகிறார். ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா தொடர்பாக மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலை நிறுத்த திட்டமா.?
எனவே இதற்கு முன் அரவங்குறிச்சி மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதே போல ஈரோடு கிழக்கு தொகுதியிலும் தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று மாலை தேர்தல் ஆணையர் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியோடு ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் தேர்தலி ல் பணப்பட்டுடவாடா தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பணம் பட்டுவாடா தொடர்பாக உரிய ஆதாரம் இருக்கும் பட்சத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்து செய்த்தற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.