தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களாக உள்ள எச்.ராஜாவை கேரள மாநில ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தீவிர அரசியலில் எச்.ராஜா
எச்.ராஜா பாரதிய ஜனதா கட்சியில் 1989 ஆம் ஆண்டு இணைந்தது முதல் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2001 ல் காரைக்குடி தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் உதயப்பாவை தோற்கடித்து முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார் எச்.ராஜா, 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என 6 முறை தேர்தலில் போட்டியிட்டவர் ஒரே ஒரு முறை மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றிய ராஜா தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஆளுநர்களாக தமிழிசை, இல.கணேசன்
திராவிட கட்சிகளுக்கு எதிரான தனது சர்ச்சை பேச்சால் அனைவராலும் அறியப்பட்டவர் எச்.ராஜா. டுவிட்டர் பதிவில் கருத்து ஒன்றை தெரிவித்துவிட்டு பின்னர் இது தான் தெரிவிக்கவில்லையென்றும் தனது அட்மின் பதிவு செய்துவிட்டதாகவும் கூறி சமாளித்தார். இது போன்ற பல்வேறு சம்பவங்களில் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் எச்.ராஜா, இந்தநிலையில் எச்.ராஜாவிற்கு ஆளுநர் பதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் கவர்னராக உள்ளார். மற்றொரு மூத்த தலைவர் இல. கணேசன், மணிப்பூர் கவர்னராக உள்ளார். தெலுங்கானாவில் அந்த மாநில அரசிற்கும் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழிசையை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநில ஆளுநராக எச்.ராஜா ?
இந்தநிலையில் தமிழக பாஜக மூத்த தலைவராக உள்ள எச்.ராஜா மற்றும் பொன்.ராதாகிருஷ்ணனை ஆளுநர் பொறுப்பில் நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய அரசு இருவருடன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான் மாற்றப்பட்டு எச்.ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் எச்.ராஜாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.