நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி.. இன்று வெளியாக வாய்ப்பு..?

By Raghupati RFirst Published Jan 26, 2022, 12:18 PM IST
Highlights

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் இன்று வரும் என தகவல் வெளியாகியாகியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மருத்துவர்கள் நக்கீரன், பாண்டியராஜ் உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர் டி.மோகன் ஆகியோர் ஆஜராகினர்.

மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வாதாடியதாவது, 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, தமிழக அரசுடன், மாநில தேர்தல் கமிஷன் கலந்து ஆலோசிக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால், ஆயிரக்கணக்கான தெருக்கள் கட்டுப்பாடான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஓட்டுப் பதிவுக்கு எப்படி வெளியில் வர முடியும். வேட்பாளர், வாக்காளர், பொது மக்கள் பார்வையில் இருந்து சூழ்நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.

பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களில் ஓட்டு கேட்டு பேரணியாக சென்று விடுவர். ஆனால், உள்ளாட்சி தேர்தலில், வீடு வீடாக வேட்பாளர்கள் வருவர்.அவர்களுடன் ஆதரவாளர்கள் வருவர். வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும். பொது மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது. ஐந்து ஆண்டுகளாக தேர்தல் இல்லை. மூன்று மாதங்கள் தள்ளி போவதால் எந்த பாதிப்பும் இல்லை. இயற்கை சீற்றம், நோய் தொற்று சூழ்நிலைகளில் தேர்தலை தள்ளி வைக்கலாம். பள்ளி, கல்லுாரி, நீதிமன்றம் மூடியிருக்கும்போது, தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது?இவ்வாறு அவர்கள் வாதாடினர்.

மாநில தேர்தல் கமிஷன் சார்பில், வழக்கறிஞர் சிவசண்முகம் ஆஜராகி, தேர்தல் அறிவிப்பை வெளியிட, தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளோம். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுவோம் என்றார். அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம். மாநில தேர்தல் கமிஷனுக்கு, அவ்வப்போது அரசு தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’' என்றார்.

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான தடை எதுவும் இல்லாததால், உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவும் அடைவதால், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் இன்று வரும் என தகவல் வெளியாகியாகியுள்ளது.

click me!