வேலு நாச்சியார் முதல் மருது சகோதரர்கள் வரை..டில்லியில் நிராகரித்த அலங்கார ஊர்திகளின்..அசத்தல் அணிவகுப்பு !!

By Raghupati RFirst Published Jan 26, 2022, 9:50 AM IST
Highlights

73வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு தொடங்கியது.

நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு , மாநிலங்களின் அலங்கார ஊர்தி ஆகியவை கொண்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. இருப்பினும் தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு இந்த முறை நிராகரித்தது. 

73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது. 

இதேபோல், விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்தியில் இடம்பெறுகிறது. தமிழக செய்தித்துறை தொடர்பு துறையின் அலங்கார ஊர்தியின் முகப்பில் மீண்டும் மஞ்ச பை திட்டம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மஞ்ச பையுடன் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.  

ராஜாஜி, முத்துராமலிங்க தேவர் ,காமராஜர் ,கக்கன், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், சின்னமலை ,திருப்பூர் குமரன் , வ.வே.சு. ஐயர் காயிதேமில்லத், ஜே.சி. குமரப்பா ஆகியோரின் சிலைகளும் இந்த அலங்கார ஊர்திகளில் இடம்பெற்றிருந்தன. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மொத்தமாக 3 அலங்கார ஊர்திகள் மட்டுமே அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

click me!