இரண்டு மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் ஓரிரு நாட்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழிசையும் பாஜகவும்
காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, இவர் 1999-ல் பாஜக உறுப்பினரானார். அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து அவரது பணி தமிழக பாஜக மாநில தலைவர் வரை உயர்த்தியது. இதற்கு காரணம் அவரது அயராத உழைப்பாகும், பாஜக சார்பாக போராட்டம், ஆர்ப்பாட்டம் என எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக களத்தில் இருப்பார். அந்த அளவிற்கு தமிழகத்தில் பாஜகவின் வளர்சிக்கு வித்திட்டவர் தமிழிசை. இவரது தாமரை மலந்தே தீரும் என்ற வசனம் அனைத்து தரப்பு மக்களாலும் ரசித்து பார்க்கப்பட்டதாகும்.
பாஜக தலைவர் டூ ஆளுநர்
தமிழக பாஜக சார்பாக சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலுப் களம் இறங்கிய தமிழிசைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து தமிழிசையை கை விட்டு விடாத மத்திய பாஜக அரசு தமிழிசையை தெலங்கானா மாநில ஆளுநர் பதவி கொடுத்து அழகு பார்த்தது. அவரது சிறப்பான பணியை பாராட்டும் வகையில் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநிலத்தையும் வழங்கியது. ஆளுநராக இருப்பவர் அரசியலில் இருந்து விலகி இருப்பார். ஆனால் தமிழிசையோ தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்தினார். பல்வேறு பிரச்சனைகளின் போது திமுக அரசை விமர்சித்து கருத்து கூறினார். இதனால் தமிழிசைக்கு அரசியல் ஆர்வம் விட்டுவிடவில்லையென பரவலாக கூறப்பட்டது.
மீண்டும் அரசியல் களத்தில் தமிழிசை
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்க தமிழிசை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் தமிழிசை தெலங்கானா மாநிலம் மட்டுமில்லாமல், தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் தினந்தோறும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் மார்ச் மாதம் யாருக்காகவும் நேரம் ஒதுக்கவில்லையென கூறப்படுகிறது. எனவே பாஜக தேசிய தலைமை ஓகே சொன்ன அடுத்த நிமிடம் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட களம் இறங்க இருப்பதாகவும், தூத்துக்குடி, சென்னை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படியுங்கள்