OPS vs EPS :ஓபிஎஸ்க்கு அதிமுக அவைத் தலைவர் பதவியா..? அதிரடியாக களத்தில் இறங்கிய இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jun 16, 2022, 12:11 PM IST
Highlights

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்க வேண்டும் என  பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவைத் தலைவர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

இரட்டை இலை- ஒற்றை தலை

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது, இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளரானார், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதன் காரணமாக சசிகலாவை கழட்டி விட்ட இபிஎஸ் அணி,  ஓபிஎஸ் அணியுடன் இணைந்து  சசிகலாவிற்கு வழங்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. புதிதாக  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற  பதவியை உருவாக்கி கழக சட்ட விதிகளிலும்  திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு அதிமுகவின் இரட்டை தலைமை தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. மேலும் இரட்டை தலைமை காரணமாக கட்சியின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்க்கு முன்னதாக  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.  

பொதுச்செயலாளர் இபிஎஸ்.?
 
இந்த கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனையடுத்து அதிமுகவின் ஒற்றை தலைமை ஓபிஎஸ் என தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியிருந்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள்  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரிடமும் மாறி மாறி ஆலோசனை நடத்தினர்.  அப்போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் பதவியும், ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவைத்தலைவர் பதவியும் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை ஆரம்ப நிலையிலேயே ஓபிஎஸ் தரப்பு நிராகரித்து உள்ளது.

ஓபிஎஸ் அதிருப்தி

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற போதும் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் ஓபிஎஸ்சை தான்  முதலமைச்சராக நியமித்ததாகவும், இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு  ஓபிஎஸ் இடம் இருந்த  முதலமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு, சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியும் வழங்கவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது கட்சியில் வழங்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியும் பறிக்கப்படுவதாக கூறப்படுவது வேதனை அளிப்பதாக  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இபிஎஸ் அணியினரின் செயல்பாடுகளால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது.
 

click me!