2002ல் இஸ்லாமியர்.. 2017ல் பட்டியலினத்தவர்.. 2022ல் பழங்குடியினர்.. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சம்பவம்!

By Asianet TamilFirst Published Jun 21, 2022, 10:27 PM IST
Highlights

ஆட்சியில் இருந்த மூன்று முறையும் இஸ்லாமியர், பட்டியலினத்தவர், பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்து ஸ்கோர் செய்திருக்கிறது பாஜக.
 

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் ஜூலை 25 அன்று நிறைவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 16-ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் தங்களுடைய பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை அறிவித்துள்ளன. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுநராக இருந்தவர்.

இத்தேர்தலில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், அதுபோலவே திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2002-ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தபோது, அந்தத் தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தமிழரான அப்துல் கலாமை பாஜக தலைமை வேட்பாளராக அறிவித்து, அவரை வெற்றி பெறவும் வைத்து குடியரசுத் தலைவர் ஆக்கியது. வாஜ்பாய்க்குப் பிறகு 2014-இல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 2017-இல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரை வெற்றியும் பெற வைத்தது. இதன் மூலம் நாட்டில் கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு பட்டிலியனத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக ஆன பெருமை ராம்நாத் கோவிந்துக்குக் கிடைத்தது. தற்போது நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாக்கு மதிப்பில் சுமார் ஒன்றரை சதவீதம் மட்டுமே பாஜக கூட்டணிக்குக் குறைவாக உள்ளது. இத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவே கருதப்படுகிறது.

அப்படி திரெளபதி முர்மு வெற்றி பெற்றால், நாட்டில் குடியரசுத் தலைவரான முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை திரெளபதி முர்முவுக்குக் கிடைக்கும். மேலும் ஆட்சியில் இருந்த மூன்று முறையும் இஸ்லாமியர், பட்டியலினத்தவர், பழங்குடியினரை குடியரசுத் தலைவராக்கிய பெருமை பாஜகவுக்கும் கிடைக்கும்.  
 

click me!