
எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய நடிகர் நடிகர் எஸ்.வி.சேகர், எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக சொல்லிவிடும் பழக்கத்தை கொண்டவர்.
அப்படிப்பட்டவர், நடிகர் விஜய்க்கு “வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள்” என்று பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் மேலும் கூறி இருப்பதாவது:-.
விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், வயதில் மூத்தவர் என்பதால் ஆசிர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலுக்கு வரணும் வரணும்னு விஜய்யோட ஃபேன்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் கிளம்பி வாங்க. ஆனால் அரசியலுக்கு சினிமா நடிகன் வரக் கூடாது என்று சொல்வது எல்லாம் பயத்தில் சொல்லும் வார்த்தை.
நல்லவங்க வரணும், ஸ்ட்ரெய்ட் பார்வர்டாக இருப்பவர்கள் வரணும், நேர்மையான தன்மையும், மக்களுடைய கஷ்டங்களை புரிந்து அதற்கு என்ன செய்யணும் அப்படிங்கிறது தெரிந்தவர்கள் வந்தால் போதும். இவ்வாறு எஸ்.வி.சேகர், தமது வாழ்த்து செய்தியில் கூறி இருக்கிறார்.
இன்று விஜய் தமது 43 வது பிறந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி, அவர் நடித்து வந்த “மெர்சல்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இதுவரை “இளைய தளபதி” என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்பட்டு வந்த விஜய் இந்த படத்தில் “தளபதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விஜயின் அரசியல் பிரவேசத்தை ஒட்டியே, இளைய தளபதியாக இருந்தவர் தற்போது தளபதியாக அவதாரம் எடுத்திருக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், பாஜக பிரமுகரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவருமான நடிகர் எஸ்.வி.சேகர், விஜய்க்கு சொன்ன பிறந்த நாள் வாழ்த்தில், “வருங்கால முதல்வர்” என்று குறிப்பிட்டிருப்பது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினியின் அரசியல் பிரவேசம் கிட்டத்தட்ட உறுதியானாலும், அவர் பாஜகவின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவாரா? என்ற சந்தேகம் ஒரு பக்கம் டெல்லிக்கு உள்ளது.
அத்துடன், அவருக்கு நிகராக மற்றொருவரும் அரசியல் களத்தில் தயாராக இருப்பது நல்லது என்றே டெல்லி நினைக்கிறது. அதன் காரணமாகவே, டெல்லியின் பார்வை நடிகர் விஜயை நோக்கி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்காகவே, நடிகர் விஜயை தமக்கு சாதகமாக வளைக்கும் விதத்தில், எஸ்.வி.சேகர், அவருக்கு “வருங்கால முதல்வர்” என்ற வாழ்த்து செய்தியை அனுப்பி உள்ளார் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.