நோட்டுக்கும் சீட்டுக்குமான ஆயுதமா வன்னியர் இட ஒதுக்கீடு..? டாக்டர் ராமதாஸ் மீது வேல்முருகன் அட்டாக்..!

By Asianet TamilFirst Published Feb 4, 2021, 9:25 PM IST
Highlights

தேர்தல் நேரத்தில் மருத்துவர் ராமதாஸ், வன்னியர் இட ஒதுக்கீட்டை நோட்டுக்கும் சீட்டுக்குமான ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
 

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நெய்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வன்னியர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போராட்டம் என்பது நீண்ட காலப் போராட்டம் ஆகும். வன்னியர்களுக்கு மத்தியில் 2 சதவீதம், மாநிலத்தில் 20 சதவீதம் என்பதே போராட்டத்தின் நோக்கம் ஆகும். எனவே, மத்திய,  மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுத்து சாதி எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதுவரை சாதி வாரியான கணக்கெடுப்புகளை நடத்தவில்லை. 


நானும் பல்வேறு வன்னிய அமைப்புகளும் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தால், உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என ஸ்டாலினும் உறுதியளித்துள்ளார். பாமக  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையைக் கைவிட்டு, தற்போது உள் ஒதுக்கீடு தந்தால் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மருத்துவர் ராமதாஸ், வன்னியர் இட ஒதுக்கீட்டை நோட்டுக்கும் சீட்டுக்குமான ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.


தங்கள் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு தேவையென்றால், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் கேட்டுப்பெறலாம். அதை விடுத்து வன்னியர்களை வம்புக்கு இழுப்பதுபோல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என வேல்முருகன் தெரிவித்தார்.

click me!