200 தொகுதிகள் அல்ல... 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி... டார்கெட்டை மாற்றிய மு.க. ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Feb 4, 2021, 9:12 PM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், மக்களுடைய ஆர்வத்தைப் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் தேர்தல் பிரசாரம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று நடைபெற்றது. அங்கே பொதுமக்களிடம் இருந்து புகார் பெட்டியில் பெறப்பட்ட மனுக்களில் சிலவற்றை தேர்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களைப் பேச வைத்து மு.க. ஸ்டாலின் சவைத்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், மக்களுடைய ஆர்வத்தைப் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன். இதை ஆணவத்துடன் நான் சொல்லவில்லை, மக்களின் உணர்வுகளை அறிந்ததால்தான் சொல்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்களின் 100 கோரிக்கைகளில் 95-வது  நிச்சயம் நிறைவேற்றுவேன். புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும், மத்திய அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை. இதை தட்டிக்கேட்க அதிமுக அரசுக்கு தைரியம் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் திமுக தட்டிக்கேட்கும். மாநிலத்தின் உரிமையைப் பேசிப் பெறுவோம். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை அரசிடமிருந்து தலா ரூ. 5 கோடியைப் பெற்றுத்தர வேண்டும் என மத்திய அரசுக்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது ஊழல் ஆளுநரிடம் புகார் அளித்தும், அவர் நடவடிக்கை எடுக்காததால், சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.3,000 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார். இதுசம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளாமல் முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார். அதிமுக அரசில் ஊழலில் முதலிடத்தில் இருப்பவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. தமிழகத்தில் பல புதிய திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தியவர் கருணாநிதி. ஆனால், அவரை அடக்கம் செய்ய 6 அடி இடம்கூட ஒதுக்க மறுத்ததுதான் இந்த அதிமுக அரசு. ஆனால் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு ரூ.80 கோடியில் நினைவிடம் கட்டியுள்ளனர்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!