
தீபாவளி வசூல் நடத்திய, வேலூர் மாவட்ட தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனா வீடு மற்றும் அலுவலகங்களில் 2.27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுதான் ஊழலற்ற நிர்வாகமா என்று கேள்வி எழுப்பிய அடுத்த சில மணிநேரங்களில் பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தீபாவளி வசூல் நடத்திய வேலூர் பொதுப்பணித்துறை தொழில்நுட்பக் கல்வி செயற்பொறியாளராக இருந்த ஷோபனா வீட்டில் இந்த மாத தொடக்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இதன் முடிவில், கணக்கில் வராத 2.27 கோடி ரூபாய் ரொக்கம், 38 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஷோபனா மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஷோபனாவிற்கு திருச்சி மண்டல பொதுப்பணித் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் குறும்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முதல்வர். லஞ்சம் வாங்குவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த குறும்படம் இருந்தது. வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என்பதைத்தான் எனது முதன்மையான தேர்தல் வாக்குறுதியாக வழங்கியிருந்தேன்.
லஞ்சம் என்ற புற்றுநோய் அரசு நிர்வாகத்தைப் பீடித்துவிடாமல் காக்கவேண்டியது ஒவ்வொரு அலுவலரின் கடமையாகும். கடமை தவறுவோர் மீது தவறால் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் போட்ட பதிவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நறுக்கென்று பதிவு ஒன்றை செய்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வெளிப்படையான,ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பேன் என விளம்பர படம் எடுக்கும் ஸ்டாலின். 2.27கோடி ரூபாய் லஞ்சமாக பெற்ற பொதுப் பணித்துறை அதிகாரிக்கு பதவி உயர்வுடன் பணியிட மாறுதல் வழங்கியுள்ளது. இதுதான் அந்த கடமை தவறுவோர் மீது தவறாமல் எடுக்கப்படும் நடவடிக்கையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கேள்வி எழுப்பிய சில மணிநேரங்களிலேயே 5 மணடிநேர விசாரணைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஷோபனாவை கைது செய்துள்ளனர்.