ADMK: அதிமுகவிலிருந்து தூக்கி வீசப்பட்ட அன்வர் ராஜா... ஓபிஎஸ்-ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.!

By Asianet TamilFirst Published Nov 30, 2021, 11:20 PM IST
Highlights

சில நாட்களுக்கு முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்துகளால் கொந்தளித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அன்வர் ராஜாவை அடிக்கப் பாய்ந்ததாக தகவல்கள் வெளியானது.

அதிமுக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்தத் தலைவர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து  நீக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான அன்வர் ராஜா, தமிழக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட பல பதவிகளை வகித்தவர். அதிமுகவின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவராகவும் அன்வர் ராஜா இருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜகவுட்ன கூட்டணி சேர்ந்ததைக் குறை கூறினார் அன்வர் ராஜா. அண்மைக் காலமாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அன்வர் ராஜா பேசி வந்தார். இதுதொடர்பாக அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து அன்வர் ராஜா பேசிய ஆடியோ ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் புயலைக் கிளப்பியது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்துகளால் கொந்தளித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அன்வர் ராஜாவை அடிக்கப் பாய்ந்ததாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே அன்வர் ராஜா நேற்று அளித்த பேட்டியில் கூட்டணி அமைப்பது, அதை செயல்படுத்துவது அதிமுக தலைமை சரிவர செயல்படவில்லை என்று பேசியிருந்தார். சசிகலாவை சேர்த்திருந்தால் கூடுதலாக வெற்றியை பெற்றிருக்க முடியும் என்றும் அன்வர் ராஜா கூறியிருந்தார். தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக அன்வர் ராஜா பேசிவந்த நிலையில்,. அவரை அதிமுகவிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா அதிமுகவின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் எதிரான வகையில் செயல்பட்டதால் அன்வர்ராஜா நீக்கப்பட்டதாக” என்று ஓபிஎஸ்  மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதிமுக செயற்குழு நாளை கூட இருந்த நிலையில் அன்வர்ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
click me!