தமிழ் புத்தாண்டு திரும்பவும் மாற்றமா.? திமுக நிலைப்பாட்டை மக்கள் மீது திணிப்பதா.? கொந்தளிக்கும் பாஜக.!

By Asianet TamilFirst Published Nov 30, 2021, 10:12 PM IST
Highlights

ஏற்கனவே இந்த முயற்சியை மக்கள் ஏற்க மறுத்ததோடு, காலம் காலமாக சித்திரை ஒன்றாம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வந்ததை திமுக அரசு மாற்றுவதற்கு செய்த முயற்சியை முறியடித்துள்ளார்கள்.
 

தமிழ்ப் புத்தாண்டு விவகாரத்தில் திமுகவின்  நிலைப்பாட்டை, அரசின் நிலைப்பாடாக எண்ணி, மக்கள் மத்தியில்  திணிக்க முயலக் கூடாது என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் நாளிலிருந்து தை முதல் தேதிக்கு மாற்றி சட்டம் கொண்டு வந்தார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. தை முதல் தேதியில்தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழ் சான்றோர்களும் ஆன்றோர்களும் கூறியதை மேற்கோள் காட்டி இந்த முடிவை கருணாநிதி எடுத்தார். இதன்படி 2011 வரை தமிழ்ப் புத்தாண்டு தை முதலில் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், கருணாநிதியின் இந்த முடிவை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். 2011ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கருணாநிதியின் சுய விளம்பரத்துக்காக மக்களின் உணர்வுகளைப் புண்டுபத்திய சட்டத்தை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 21 பொருட்கள் வழங்கும் பரிசு தொகுப்புக்கான கைப்பை சமூக ஊடங்களில் வெளியானது. அதில், பொங்கல் வாழ்த்து மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரிலும் தமிழக அரசின் முத்திரையுடன் அந்த கைப்பை இருந்தது. இதனையடுத்து, தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் தை முதல் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக திமுக அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், சமூக ஊடகங்களில் அதிமுக மற்றும் பாஜகவினர் இதுதொடர்பாக விமர்சித்து வருகிறார்கள். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், மீண்டும் தை முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டு  என அறிவிப்பு வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி வருகின்றது. அப்படி ஒரு திட்டம் தமிழக அரசுக்கு இருக்குமானால் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்துக்கு மருந்தில்லை என்பது போல் தேவையற்ற பிடிவாதத்தை திமுக அரசு கைவிட்டு, மழை, வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் முயற்சியில் கவனம் செலுத்துவது நலம்.

ஏற்கனவே இந்த முயற்சியை மக்கள் ஏற்க மறுத்ததோடு, காலம் காலமாக சித்திரை ஒன்றாம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வந்ததை திமுக அரசு மாற்றுவதற்கு செய்த முயற்சியை முறியடித்துள்ளார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவின்  நிலைப்பாட்டை, அரசின் நிலைப்பாடாக எண்ணி, மக்கள் மத்தியில்  திணிக்க முயலக் கூடாது” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்..

click me!