கருணாநிதி செய்த தவறையே திரும்பவும் செய்வதா.? விளம்பர விளையாட்டு வேண்டாம்.. ஸ்டாலினை எச்சரித்த டிடிவி தினகரன்!

By Asianet TamilFirst Published Nov 30, 2021, 9:27 PM IST
Highlights

கருணாநிதி செய்த இதே போன்ற தவறை, புரட்சித்தலைவி அம்மா திருத்தி, மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடுகிறபடி சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக்கினார்கள். 

தமிழ்ப் புத்தாண்டு என்பதை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு தி.மு.க அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் நாளிலிருந்து தை முதல் தேதிக்கு மாற்றி சட்டம் கொண்டு வந்தார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. தை முதல் தேதியில்தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழ் சான்றோர்களும் ஆன்றோர்களும் கூறியதை மேற்கோள் காட்டி இந்த முடிவை கருணாநிதி எடுத்தார். இதன்படி 2011 வரை தமிழ்ப் புத்தாண்டு தை முதலில் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், கருணாநிதியின் இந்த முடிவை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். 2011ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கருணாநிதியின் சுய விளம்பரத்துக்காக மக்களின் உணர்வுகளைப் புண்டுபத்திய சட்டத்தை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியே நீடித்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக எந்த மாற்றுக் கருத்தும் ஏற்படவில்லை. இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் தை முதல் தேதியில் கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, 2022ஆம் ஆண்டு அரசு விடுமுறை பட்டியலில் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், தற்போது தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 21 பொருட்கள் வழங்கும் பரிசு தொகுப்புக்கான கைப்பை சமூக ஊடங்களில் வெளியானது.

அதில், பொங்கல் வாழ்த்து மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரிலும் தமிழக அரசின் முத்திரையுடன் அந்த கைப்பை இருந்தது. இதனையடுத்து, தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் தை முதல் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. இந்த கைப்பையை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்ப் புத்தாண்டு என்பதை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு தி.மு.க அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டமிருந்தால் அதனைக் கைவிட வேண்டும். கருணாநிதி செய்த இதே போன்ற தவறை, புரட்சித்தலைவி அம்மா திருத்தி, மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடுகிறபடி சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக்கினார்கள். 

நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை, இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்தது உள்ளிட்ட தி.மு.க அரசின் தோல்விகளை திசை திருப்பவே இதுபோன்ற தேவையில்லாத வேலைகளைச் செய்யத் துடிக்கிறார்கள். உண்மையாகவே தமிழை வளர்ப்பதற்கு செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், எப்போதும் போல விளம்பர விளையாட்டிலேயே ஈடுபட்டு தமிழக மக்களை ஏமாற்ற நினைப்பதை தி.மு.க அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று டிடிவி தினகரன் அதில் தெரிவித்துள்ளார்.

click me!