Anwar raja: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா திமுகவில் இணைகிறாரா? பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Dec 1, 2021, 6:40 AM IST
Highlights

அதிமுகவுக்கு எதிராக அன்வர் ராஜா பேசிவந்த நிலையில், அவரை அதிமுகவிலிருந்து நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர்.

அதிமுக செயற்குழு இன்று கூட உள்ள நிலையில் மூத்த தலைவர் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அன்வர் ராஜாவை திமுக பக்கம் இழுக்க அமைச்சர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் மூத்த அரசியல்வாதியாக இருந்து வருபவர் அன்வர் ராஜா. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பியான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லம் பிரிந்து தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் இருந்தவர். பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என அதிரடியாக கூறினார்.  எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர். இதுவரை சசிகலா தொடர்பாக எந்த ஒரு விமர்சனத்தையும் இவர் முன்வைத்ததில்லை. எந்த ஒரு பேட்டி மற்றும் நிகழ்ச்சியில் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த 24ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போது கட்சித் தலைமை வலுவாக இல்லை என்றும், அதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் அன்வர் ராஜா கூறியதாகவும், அதனால் சி.வி. சண்முகம் அவரை தாக்க முற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதேபோல், அன்வர் ராஜா நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்;- கூட்டணி அமைப்பது, அதை செயல்படுத்துவது அதிமுக தலைமை சரிவர செயல்படவில்லை. சசிகலாவை சேர்த்திருந்தால் கூடுதலாக வெற்றியை பெற்றிருக்க முடியும் என்றும் அன்வர் ராஜா கூறியிருந்தார். தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக அன்வர் ராஜா பேசிவந்த நிலையில், அவரை அதிமுகவிலிருந்து நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் அன்வர் ராஜாவை திமுக பக்கம் இழுக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பொறுப்பை போக்குவத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் சீனியரான உங்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. உங்களுக்கு முக்கியப் பொறுப்பு தருறோம். சிறுபான்மையினரை மதிக்குற கட்சி திமுக என ராஜ கண்ணப்பன் தரப்பில் இருந்து தூது சென்றதாக கூறப்படுகிறது. அதிமுகவை மீட்பதில் சசிகலா திணறி வரும் நிலையில் அவருடன் சேர்ந்ததால் எந்த பயனும் இருக்காது என்பதால் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவுடன் இணைவதையே அன்வர் ராஜா விரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!