
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது.
சாதியை சொல்லி திட்டிய அமைச்சர்
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார் என்று முதுகுளத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகநீதி பற்றி பேசும் உங்கள் ஆட்சியில் ஒரு அமைச்சரின் சமூகநீதி இதுதானா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், அதிமுகவும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்விகள் எழுப்பினர். இதனையடுத்து, தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி, ஆட்சி அமைத்த பின், முதல் முறையாக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.
இலாகா மாற்றம்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பதுதான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக விமர்சனம்
இதுதொடர்பாக அதிமுக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில்;- ‘‘அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பதுதான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? இது தண்டனையா அல்லது பரிசா? ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்? @mkstalin’’ என விமர்சனம் செய்துள்ளது.