அமைச்சரானது முதல் தொடர் சர்ச்சையில் சிக்கிய ராஜகண்ணப்பன்.. இலாகா பந்தாடப்பட்டதன் பின்னணி என்ன.?

Published : Mar 29, 2022, 09:59 PM ISTUpdated : Mar 29, 2022, 10:23 PM IST
அமைச்சரானது முதல் தொடர் சர்ச்சையில் சிக்கிய ராஜகண்ணப்பன்.. இலாகா பந்தாடப்பட்டதன் பின்னணி என்ன.?

சுருக்கம்

ராஜகண்ணப்பன் அமைச்சரானது முதலே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்பு தனியாரில் வாங்க நிபந்தனைகளை விதித்து கமிஷன் பெறும் வண்ணம் நடந்துகொண்டதாக போக்குவரத்துத் துறை மீது புகார் எழுந்தது

சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடலா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இலாகா மாற்றம்

ஆளுநர் மாளிகையிலிருந்து இன்று மாலை ஒரு செய்திக் குறிப்பு வெளியானது. அதில், “முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா  மாற்றப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த போக்குவரத்து துறையை, இனி பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைக்கபடுகிறது. ராஜகண்ணப்பன் இனி இனி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை கவனித்துக் கொள்வார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டியதாகப் புகார் எழுந்தது.

சாதியை சொல்லி திட்டிய அமைச்சர்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், “அமைச்சர் என் சாதியை சொல்லி மீண்டும் மீண்டும் திட்டினார். நான் சொல்வதை எதையும் நீ கேட்க மாட்டாயா? சேர்மன் சொன்னால் மட்டும்தான் கேட்பியா? என்று கேட்டார். மேலும் உன்னை இங்கிருந்து இடம் மாற்றி காட்டட்டுமா? என்னை 6 முறை சாதி பெயரை சொல்லி திட்டினார். எனக்கு 57 வயதாகிறது. இந்த வயதில் என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது.” என்று ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் ராஜகண்ணப்பன் போக்குவரத்துத் துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார்.   

இதுதான் திராவிட மாடலா?

ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டது குறித்தும் இந்த விவகாரம் தொடர்பாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமரசனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், “தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜ கண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதல்வர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா? சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?! ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா?” என்று தினகரன் பதிவிட்டுள்ளார்.

தொடர் சர்ச்சையில் ராஜகண்ணப்பன்

ராஜகண்ணப்பன் அமைச்சரானது முதலே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்பு தனியாரில் வாங்க நிபந்தனைகளை விதித்து கமிஷன் பெறும் வண்ணம் நடந்துகொண்டதாக போக்குவரத்துத் துறை மீது புகார் எழுந்தது. சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத 35 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது சர்ச்சை ஆனது. இந்த விவகாரத்தில் நடராஜனை காப்பாற்றும் விதமாக அமைச்சர் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதேபோல அண்மையில் அரசுப் பேருந்துகளை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோட்டல்களில் நிறுத்தும் விவகாரத்தில் சைவ உணவு கடைகளில் மட்டுமே நிறுத்தவேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி சர்ச்சையானது. பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டது. தொடர்ந்து சர்ச்சையில் அடிப்பட்ட போக்குவரத்துத் துறையிலிருந்து ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டிருக்கிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!