
கோவை புறக்கணிப்பு :
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கடந்த வாரம் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதில் கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை, ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவு படுத்த நடவடிக்கைகள் இல்லை என்பதை பதிவு செய்தேன்.
சட்டமன்றத்தில் என்னை பேச விடாமல் பல்வேறு துறை அமைச்சர்கள் இடையூறு செய்தனர். நான் சட்டமன்றத்தில் பேசியது தொடர்பான வீடியோக்களை கூட அரசிடம் இருந்து பெற முடியவில்லை. ஆனால் அமைச்சர்களின் வீடியோக்கள் மட்டும் வருகின்றது. இதில் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. தமிழக சட்ட பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் கோவை மக்கள் எதிர்பார்தது கிடைக்கவில்லை.
திமுக அராஜகம் :
ஆனால் கொலுசு மட்டும் கிடைத்தது என்று பேசினேன். அதில் கொலுசு என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டனர். சிறு குறு தொழில்களை ஊக்கபடுத்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லை. தமிழக பட்ஜெட்டில் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை விமர்சனம் செய்த நபர் கைது குறித்த கேள்விக்கு, பாஜக சித்தாத்திற்கு ஆதரவாக எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
திமுகவை விமர்சனம் செய்யும் பாஜக ஆதவாளர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. ஏபிவிபி அமைப்பின் சுப்பையா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார் கொடுத்த பெண்ணே சமரசம் ஆகியும் நடவடிக்கை தொடர்கின்றது. சுப்பையா மீதான வழக்கில் கூடுதல் வழக்கு பிரிவு போட்டு பழி வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
திணறும் தமிழக அரசு :
விமர்சனம் வைத்தால் இந்த அரசுக்கு ஏன் தாங்க முடியவில்லை ? கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்குகின்றதா ? மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் இலக்கு வைத்ததை செய்ய முடியவில்லை. ஆனால் மத்திய அரசு நிதி வருவாயை பகிர்ந்து அளித்துள்ளது. இதனால் 24% உயர்ந்த வரி வருவாயை தமிழகத்திற்கு வழங்கி இருக்கின்றது. மத்திய அரசு வரியை வசூல் செய்து தமிழகத்திற்கு கொடுக்கின்றது.
மாநில அரசு நிதி வருவாயை வசூலிக்க எதுவும் செய்யவில்லை. சேலம் ஸ்டீல் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து பாஜக லாபத்திற்கு கொண்டு வந்துள்ளது. பஞ்சு விலை உயர்வு குறித்து கடந்த வாரமே மத்திய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பஞ்சு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’ என்று கூறினார்.