தமிழகத்துக்கு இவ்வளவுதான் தடுப்பூசியா..? ஏன் இப்படி பாரபட்சம் காட்றீங்க.. கோபத்தில் வைகோ..!

By Asianet TamilFirst Published Jun 1, 2021, 9:38 PM IST
Highlights

மத்திய அரசு மாநிலங்களுக்குத் தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சமாக நடந்து கொள்வதுதான் வேதனை அளிக்கிறது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
 

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை தொடர்பாக, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு உள்ளிட்ட பொதுநல வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'மத்திய அரசு இதுவரையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 83.08 லட்சம் அலகு தடுப்பூசி மருந்தும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக 13.10 லட்சம் அலகு தடுப்பூசி மருந்தும், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. மே 30 வரை 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தற்போதைய இருப்பு இரண்டு நாட்களுக்கு மட்டுமே உள்ளது என்பதால், தேவையான தடுப்பூசிகளை வழங்கக் கோரி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது என்றும், இதில் முதல் தவணை ஜூன் 6 ஆம் தேதிதான் கிடைக்கும் என்றும், மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால், ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்றும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வூட்டி வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி மருந்து கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம், கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பணிக்கு அறைகூவலாக ஆகிவிடும். தடுப்பூசி செலுத்துவது மிகவும் குறைவான விகிதத்தில் இருந்தால், தமிழ்நாடு முழுவதும் போடும் பணி நிறைவடைய நீண்ட காலம் ஆகும். இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மத்திய அரசு மாநிலங்களுக்குத் தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சமாக நடந்து கொள்வதுதான் வேதனை அளிக்கிறது.
மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளித்த மருந்தில் குஜராத், உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு மட்டுமே 85 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தவறான கொள்கையின் விளைவாக, தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு உருவாகி வருகிறது. 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மாநிலங்களின் மீது சுமத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறையைப் போக்க, செங்கல்பட்டில் உள்ள அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பயோடெக்கில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் பணியைத் தொடங்க வேண்டும்.
ரூ.700 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை (Integrated Vaccine Complex) உடனடியாக மருந்து தயாரிக்கும் பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கவனப்படுத்தி உள்ளதை ஏற்று மாநில உரிமையை மதித்தும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
 

click me!