செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் பட்டறை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளில் வளர்ச்சியை சந்தித்தது. இந்த சூழலிதான் கொரோனா முதல் அலை தாக்கம் ஏற்பட்டது. அதை சிறப்பானக கையாண்டு நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டது. இதேபோல கொரோனாவின் இரண்டாம் அலையும் பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழகத்துக்கு தொடர்ந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டன. இந்த மாதத்திற்கு அது இரட்டிப்பாக்கப்படும். ஓரிரு நாட்களில் இன்னும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன.
தடுப்பூசி வழங்குவதை பொறுத்தவரை மாநிலத்தின் மக்கள் தொகை, அங்குள்ள கொரோனா பாதிப்பு சதவீதம், தடுப்பூசி பயன்படுத்தும் விதம் போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிகளவு வீணாக்கப்படுகிறது. தடுப்பூசி பற்றி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியதே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின்தான். அதன் காரணமாகத்தான் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், தற்போது அந்த நிலை மாறி அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வருகிறார்கள்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் பட்டறை இல்லை. அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அதை ஆய்வு செய்துதான் சரியான நேரத்தில் மத்திய அரசு அனுமதி கொடுக்கும். தேவைப்படின் மத்திய அரசேகூட ஏற்று நடத்த வாய்ப்புள்ளது” என்று எல்.முருகன் தெரிவித்தார்.