இதுதான் திமுகவின் சமூக நீதியா.?? தலித் மக்களை சாதி இழிவு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்..

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2021, 6:21 PM IST
Highlights

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் டிஎஸ்பி அடிப்படையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும், அதுதான் வன்கொடுமை சட்டத்தின் விதி, ஆனால் அதுபோன்ற எந்த விசாரணையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாதி வெறி பிடித்த அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக போஸ்டர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். 

திமுகவை சேர்ந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலித் மக்களை சாதி இழிவு வேலைகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவதுவதாக அவருக்கு எதிராக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர் மீது வன்கொடுமை  தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவருக்கு எதிராக போராடி வரும் அம்பேத்கர் பொதுவுடனை முன்னணி என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. சமூகநீதிக் காவலர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தனது கட்சியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவரின் இந்த அட்டூழியத்தை  தடுப்பாரா என்றும், அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 

பத்தாண்டுகள் கழித்து திமுக மிண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதேபோல, அரசு எடுக்கும் பல்வேறு திட்டங்களை அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு விவகாரத்தைப் பொறுத்தவரையில் அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை, திமுக ஆட்சி வந்ததேயொழிய அதிமுக போலீஸ்தான் இன்னும் ஆட்சியில் இருக்கிறது என விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பல ஊராட்சி மன்றங்களில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் கூட தங்களுக்கு ஆதரவானவர்களை போட்டியிட வைத்து அம்மக்களின் வெற்றியை ஆதிக்க சமூகத்தினர் தடுத்ததாகவும் பரவலாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த வரிசையில் ஊராட்சி மன்ற தலைவராக ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் அந்த கிராமத்தில் உள்ள தலித் மக்களைத் தொடர்ந்து சாதி இழிவு  வேலைகளில் ஈடுபட நிர்ப்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பால் நல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்த அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி  அமைப்பை சேர்ந்த மோகன்,தங்களது ஊராட்சிமன்ற தலைவர் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து வருவதாகவும், தலித் மக்களைத் தொடர்ந்து சாதி இழிவு  வேலைகளில் ஈடுபடும் வகையில் அவர் நிர்பந்தித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பால் நல்லூர் கிராமத்தில் 95% பேர் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த கிராமத்திற்கு ஊராட்சி மன்ற தலைவராக  இருப்பவர் நேரு, இவர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில் வெற்றி பெற்றதை ஒட்டிய கிராம சபை கூட்டம் நடத்தினார். அவர் நடத்திய அந்த கிராம சபை கூட்டம்தான் இன்று தலித் சமூகத்திற்கு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. கிராம பண்ணை காரர்கள் நியமனம், கிராம  வேலைக்காரர்கள் நியமனம் என தலித் மக்களை சாதி பிரிவு வேலைகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துகிறார். கிராம வேலைக்காரர்கள் என்றான் செத்த மாடுகளை அகற்றுவது, வெட்டியான் வேலை செய்வது, இழவு வீட்டில் மேளம் அடிப்பது, ஏவல் வேலை செய்வது போன்ற பணிகளை செய்பவர்கள் தான் கிராம வேலையாட்கள். அதேபோல பண்ணைக்காரர்கள் என்றால் இந்த வேலை செய்பவர்களை நிர்வகிப்பவர்கள். இந்த முறை என்பது காலம் கடந்த வழக்கொழிந்த ஒரு முறை, அழிந்தபோன ஒன்றை மீண்டும் அவர் தலித் மக்கள் மீது திணிக்கிறார். இதற்காக துண்டறிக்கைகளை அடித்து கிராம சேரிகளிலும், கிராம ஊரிலும் ஓட்டியுள்ளார். இதற்கான கிராம சபை கூட்டத்தை அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கூட்டாமல், ஒரு கோவில் நடத்துகிறார். 

அவரின் இந்த சாதிவெறி திணிப்பை ஏற்க மறுத்து கிராம மக்கள் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்துள்ளோம், ஆனால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும், அவரை எதிர்த்துப் போராடும் எங்களைப் போன்ற அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர். கிராம மக்கள் மீது சாதி ஆணவத்துடன் நடந்து கொள்ளும் அந்த ஊராட்சி மன்ற தலைவரை கண்டிக்காமல், அவர் மீது கைது நடவடிக்கையோ, வழக்கு நடவடிக்கையோ எடுக்காமல், நீதி கேட்டு போராடும் மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் அவர் திமுக கொடி பறக்கவிட்டு, விலை உயர்ந்த காரில்  நான்கு அடியாட்களுடன் கிராம மக்களை மிரட்டி வருகிறார். அவரின் நடவடிக்கைகள் தலித் மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்து வருகிறது. இத்தனை பிரச்சனைகள் நடந்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்கள் கிராமத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் டிஎஸ்பி அடிப்படையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும், அதுதான் வன்கொடுமை சட்டத்தின் விதி, ஆனால் அதுபோன்ற எந்த விசாரணையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாதி வெறி பிடித்த அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக போஸ்டர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோன்ற பரப்புரையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களையும் இப்போது அச்சுறுத்தி வருகின்றார். அவரின் இச்செயல்பாடுகள் அனைத்தும் பஞ்சாயத்து ராஜ்யம் சட்டத்திற்கு எதிராக உள்ளது. எனவே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும், பதவி பறிப்புக்கு தகுதியான நபர் தான் அவர். 

ஆனால் இதுநாள் வரை அவரது பதவி பறிக்கப்பட வில்லை, இந்நாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தன்னை ஒரு சமூகநீதி காவலராக காட்டிக் கொள்கிறார். அப்படி இருக்கக் கூடிய தமிழக முதலமைச்சர், ஒரு சாதி வெறி பிடித்த ஊராட்சி மன்ற தலைவர் துண்டு அறிக்கையின் மூலம் புதிய வடிவிலான சாதிவெறி பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில், தன்னை திமுக கட்சிக்காரன் என பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படும் அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லை. இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் காட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்கள் வேதனை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!