Mamata Banerjee : ஒவ்வொரு செங்கலாக உருவும் மம்தா.. சரிந்து விழும் காங்கிரஸ் சாம்ராஜ்யம்..

By Ganesh RamachandranFirst Published Dec 1, 2021, 5:45 PM IST
Highlights

பாஜகவை தோற்கடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியுள்ளது. பாரதிய ஜனதாவை வீழ்த்தும் முயற்சியில், காங்கிரஸை பலவீனப்படுத்துவதும் மம்தாவிற்கு அவசியமாகிறது.

இந்திய அளவில் வலிமையான எதிர்கட்சி இல்லை என்று கூறப்படும் விமர்சனங்களில் உண்மை இல்லாமல் இல்லை. மக்கள் வாக்களித்தே வலிமையான ஆளும் கட்சியாக பாஜகவை சிம்மாசனத்தில் அமர வைத்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வலிமையான எதிர்கட்சி இல்லாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோற்றது அந்தக் கட்சியின் மிகப் பெரிய தோல்வி அல்ல. தன்னை பாஜகவுக்கு மாற்றாக எதிர்கட்சியாக மக்கள் மனதில் பதிய வைக்கத் தவறியதே அந்தக் கட்சியின் மாபெரும் வரலாற்றுத் தோல்வி, பிழை. அந்த இடத்தை நிறப்ப முழுவீச்சில் முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி.

இந்தியா முழுவதிலும் வெற்றிக் கொடி நாட்டிய பாஜக, காலூன்ற போராடும் மாநிலங்கள் என்றால் அது தமிழகம், கேரளம், மேற்குவங்கம் போன்ற சில மட்டுமே. அதிலும் மேற்குவங்கத்தில் சிம்மசொப்பனமாக இருக்கிறார் மமதா. தனது பாஜக எதிர்ப்பை மேற்குவங்கத்தோடு நிறுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லை. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் தேசிய அரசியலின் மையக்களத்திற்கு குறிவைக்கிறார். பாஜகவுக்கு எதிராக 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் மமதா பானர்ஜி இறங்கியுள்ளார். டெல்லிக்கு 3 நாள் பயணம் சென்ற மமதா பானர்ஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் 3 நாட்கள் பயணம் சென்றுள்ளார்.

சிவசேனா கட்சித் தலைவரும், மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரேவையும், மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தையும் மமதா சந்தித்துப் பேசினார். முதல்வர் உத்தவ் தாக்கரேவை உடல்நிலை பிரச்சனைகள் காரணத்தால் அவர் சந்திக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் மஹாராஷ்டிராவின் அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறை முக்கியஸ்ஹர்களையும் இன்று சந்தித்துள்ளார். அவ்வளவு பேரையும் சந்தித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரையும் சந்திக்கவில்லை.

இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “சோனியாவை சந்திக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன?” என்று போட்டுத் தாக்கினார் மமதா. பாஜகவை எதிர்த்து களமாட வேண்டும் என்றால், அது காங்கிரஸ் நிழலில் கைகூடாது. பலமான மாற்று சக்தியாக தனியாகத் தலைதூக்க வேண்டும் என்று தெளிவான பாதையில் செல்கிறார். அதுமட்டுமல்ல மேற்குவங்கம் தாண்டி தன் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் கோட்டையிலிருந்து செங்கற்களை உறுவத் தொடங்கியுள்ளார் மமஹா பேனர்ஜி.

மேகாலாயா மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் முகுல்சங்மா உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துள்ளனர். கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில முன்னாள் முதல்வர் லூசிஹின்ஹோ பெலேரியா திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தார். அவரது ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியின் 9 மூத்த தலைவர்களும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி.யும், மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சுஷ்மிதா தேவ் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தார். இருவருக்கு திரிணமூல் காங்கிரஸில் சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற, வடக்கு கோவா காங்கிரஸ் தலைவர் உலாஸ் வஸ்கர் திரிணமூல் காங்கிரஸுக்கு இழுக்கப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான கீர்த்தி ஆசாத், ஹரியாணா காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் தன்வர், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜேஷ்பதி திரிபாதி, லலித்பதி திரிபாதி இருவரும் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துள்ளனர்.

பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கையைத் தாண்டி காங்கிரஸுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் எந்த கருத்தொற்றுமையும் இல்லை. ஆனால் மக்கள் மனதில் பாஜகவை எதிர்க்க வலிமையான தலைவராக ராகுல் காந்தி, சோனியா காந்தியை விட மமதாவே சிறந்த இரும்புக்கரம் கொண்ட தலைவி என்ற கருத்தாக்கம் பதியத் தொடங்கியுள்ளது. இது காங்கிரஸின் அரசியல் எதிர்காலத்துக்கு பெரும் சவால். இனியாவது காங்கிரஸ் மேலிடம் விழித்துக்கொள்ள வேண்டும்.

click me!