ஜெயலலிதா சொன்ன ஆதாரம் உங்ககிட்ட இருக்கா..? மு.க.ஸ்டாலினிடம் அண்ணாமலை கிடுக்குப்பிடி..!

By Thiraviaraj RMFirst Published Dec 1, 2021, 5:21 PM IST
Highlights

திமுக அரசு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப் போல தமிழர்களை ஏமாற்ற நினைத்து தமிழ் புத்தாண்டு நாளை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

மாநிலத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல் தேதி, நாளை மாற்றி பிரச்னைகளை திசைதிருப்ப திமுக அரசு முயற்சிப்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக மக்களை தொடர்ந்து புண்படுத்துவதே திமுக அரசின் வேலையாக இருந்து வருகிறது. சுய விளம்பரத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் அவர்களது நடவடிக்கை இருந்து வருகிறது. தமிழகத்தின் தேவைகள், முன்னேற்றம் இவற்றில் அக்கறை, கவனம் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக எந்த தேதியை மாற்றலாம். எந்த நாளை மாற்றலாம் அதன் மூலம் பிரச்சனைகளை எப்படி திசை திருப்பலாம் என்பதிலே தான் குறியாக இருந்து வருகிறார்கள்.

சென்னை ராஜ்ஜியத்திலிருந்து மற்ற மாநிலங்கள் பிரிந்து சென்ற நவம்பர் 1ஆம் தேதி தான் தமிழகம் தனியாக உருவானது. அதை தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும். கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று தான் பிரிக்கப்பட்ட மாநிலங்களும் நவம்பர் 1ஐ கொண்டாடி வருகின்றன. ஆனால் இதற்கு எதிர்மறையாக ஜூலை 19 தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம். எனவே அன்று ’தமிழ்நாடு நாள்’ என்று மக்களை குழப்பினார்கள். 

தமிழ் புத்தாண்டு நாள் இப்போது மீண்டும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முனைந்துள்ளார்கள். ஏப்ரல் 14. சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று உலகம் முழுவதும் வாழ்கிற தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்து மதத்தை பின்பற்றுகிற மக்கள் மட்டுமல்ல. அனைத்து தமிழர்களுமே தமிழ் புத்தாண்டை நல்ல காரியங்கள், தொழில்கள், தொடங்குவதற்கு ஏற்ற நாளாக கருதி மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். பொதுவாக கலாச்சாரம், பண்பாடு என்பதே திமுகவிற்கு கசப்பான மொழியாக காதில் விழுகிறது.

 சட்டசபையில் பேசிய போது முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெயலலிதா அவர்கள் “தமிழ் புத்தாண்டு தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அப்போது 2011 முதல் சித்திரை முதல் நாளாக தமிழ் புத்தாண்டு என்பதை தமிழக அரசும் அறிவித்து, கடைப்பிடித்து வருகிறது. 

ஆனால் இப்போது திமுக அரசு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப் போல தமிழர்களை ஏமாற்ற நினைத்து தமிழ் புத்தாண்டு நாளை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீக சகோதரர்களின் நம்பிக்கையிலும், பழக்க வழக்கங்களிலும் மூக்கை நுழைப்பதும், பக்தர்களின் நம்பிக்கைகளை சிதைப்பதிலும் திமுகவிற்கு ஒரு தீவிரம் இருக்கிறது’’ என அவர்தெரிவித்தார்.

click me!