
தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க வேண்டும் என தேர்தல் அறிவிக்கும் முன்பிருந்தே காய் நகர்த்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சி, சசிகலா வழங்கிய பதவி என்பதை துடைத்தெறிந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என நிரூபிக்கப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதற்காக பகீரதப் பிரயத்தனப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் பம்பரமாக சுழன்று வந்தார். ஆனால், தேர்தலுக்கு முந்தைய முடிவுகளை விட பிந்தைய முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனக்கு கிடைத்த நம்பகமான தகவல்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவுக்கே வெற்றி என சிறிது நம்பிக்கையுடன் அமைதி காத்து வருகிறார். தேர்தல் முடிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ரிசல்ட் தங்களுக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என்று அதிமுக தீவிர ஆன்மிகத்தில் இறங்கியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் பதவியேற்க வேண்டுமென்ற பிரதான வேண்டுதலுடன் கொல்லிமலையில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் அமைச்சர் சம்பத். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் மற்றும் பல அமைச்சர்கள் கூட ஆன்மீகத்தின் மீது தீராத பற்று கொண்டவர்கள். இந்நிலையில் அதே ஃபார்முலாவை கையில் எடுத்து இருக்கிறார் தொழில் துறை அமைச்சரான எம்.சி.சம்பத். இதற்காக விரதம் இருந்து கொல்லிமலையில் அமைந்துள்ள வள்ளலார் குடிலில், ஐந்து நாட்கள் யாகம் செய்துள்ளார். சித்தர்கள், ஞானிகள், யோகிகள் வாழ்ந்த மண் என்பதால் யாகம் நடத்த கொல்லிமலையை தேர்ந்தெடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆசி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்ரல் 21ம் தேதி, அவரது மகம் நட்சத்திரத்தில் யாகத்தை சம்பத் தொடங்கியுள்ளார். இந்த யாகத்திற்கென தலைக் காவிரி தீர்த்தம், காசி தீர்த்தம், திருக்கைலாயம் தீர்த்தங்களை சேகரித்து இந்த யாகத்துக்காக கொண்டு வந்திருக்கிறார்கள். 108 மண் கலசம், 108 பித்தளைக் கலசம், 9 வெள்ளி கலசம், 2 தங்கக் கலசம் மற்றும் செப்பு கலசங்களை வைத்து ஆக 234 தொகுதிகளைக் குறிக்கும் வகையில் 234 கலசங்களை வைத்துள்ளார். கௌரிசங்கர் சிவாச்சாரியார் தலைமையில் 11 சிவாச்சாரியர்கள், திருமுறையாளர்கள் இந்த பிரமாண்டமான யாகத்தை நடத்தியிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் யாகம் அதிமுகவுக்கு யோகம் செய்யுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.