அன்புமணியை போல திறமைசாலி உண்டா.? ஒரு முறை மாற்றத்தை பார்க்க வேண்டும்.. பாட்டாளிகளுக்கு ராமதாஸ் புதிய கட்டளை!

By Asianet TamilFirst Published Dec 25, 2021, 8:32 AM IST
Highlights

இன்னும் இறுதிவரை வன்னிய மக்களுக்காக போராடுவேன். நம்முடைய இலக்கை அடைய சிகரத்தை எட்டி பிடிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இனி தமிழகத்தை நாம் ஆள வேண்டும். நம்மிடம் ஆட்சி வர வேண்டும். கிராமம் கிராமமாக சென்று திண்ணைப் பிரசாரம் செய்யுங்கள் சென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இன்னும் நான்கரை ஆண்டுகள் கழித்து 2026-ஆம் ஆண்டில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதிருந்தே பாமக நிறுவனர் அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கொரோனா பரவல காரணமாக நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த ராமதாஸ், தற்போது தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட அளவிலான பாமக பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளை ஆலோசனையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் பாமக பொதுக்குழு கூட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசுகையில், “பாமகவின் ஒற்றை இலக்கு என்பது தமிழ் நாட்டை நாம் ஆளவேண்டும் என்பதுதான். கடந்த 42 ஆண்டுகளாக இந்த மக்களுக்காக நான் போராடியும் வாதாடியும் வந்திருக்கிறேன். ஆனால், அதற்கு எந்தப் பயனுமே நமக்கு கிடைக்கவில்லை. இனி இந்த கட்சியின் எதிர்காலம் எல்லாம் இளைஞர்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது. இனி தமிழகத்தை நாம் ஆள வேண்டும். நம்மிடம் ஆட்சி வர வேண்டும். அன்புமணியை போல ஒரு திறமைசாலி யாருமே கிடையாது. எனவே, கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு வீட்டுக்குச் செல்லுங்கள். வீட்டில் அமர்ந்து திண்ணைப் பிரசாரம் செய்யுங்கள்.

தமிழ்நாட்டில் வன்னியர் மக்கள்தொகை 2 கோடி. அதனால்தான் நாம் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டோம். ஆனால், நமக்கு வெறும் 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கொடுத்ததற்கு மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்துக்கு சென்றனர். இட ஒதுக்கீடு விஷயத்தில் நாம் வெல்ல வேண்டும். இந்த 84 வயதிலும் மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் இறுதிவரை வன்னிய மக்களுக்காக போராடுவேன். ஒரு முறை மாற்றத்தை நான் பார்க்க வேண்டும். நம்முடைய இலக்கை அடைய சிகரத்தை எட்டி பிடிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார். 

click me!