எம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா.? பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர!

By Asianet TamilFirst Published Jul 27, 2021, 9:39 PM IST
Highlights

தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான்  2026-ஆம் ஆண்டு வரை எம்.பி.க்கள்எண்ணிக்கை  உயர்த்தப்படாது. இதில் பயப்பட அவசியமே இல்லை என்று தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். 
 

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி.க்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி தெரிவித்திருந்தார். இதனால், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிப்பு அடையும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தக் கருத்து தொடர்பாக தமிழக பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் அவர் பேட்டி அளித்தார்.
“எம்.பி.க்கள் எண்ணிக்கையை ஆயிரமாக மாற்றபோவதாக கூறப்படுவதெல்லாம் வெறும் புரளி. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம்  அடுத்த 100 ஆண்டுகளுக்கும் நிலைத்திருக்கும் வகையில் 2 ஆயிரம் எம்.பி.களுக்கான இட வசதிகளோடு கட்டப்படுகிறதே தவிர எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி விஷயம் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.
கடந்த 2003-ஆம் ஆண்டில் பாஜக-திமுக கூட்டணி அமைத்திருந்தபோது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 2026-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் இப்போதைய எண்ணிக்கையே தொடரும் என அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய் தெரிவித்திருந்தார். தென் மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் 2026-ஆம் ஆண்டு வரை எம்.பி.க்களின் எண்ணிக்கை உயர்த்தப்படமாட்டாது என்று வாஜ்பாஜ் தெரிவித்தார். எனவே இந்த விவகாரத்தில் மணீஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், சண்முகம், வைகைச்செல்வன் ஆகியோர் உண்மைக்கு புறம்பாகவோ விசயம் தெரியாமலோ இதைப் பற்றி பேசுகிறார்கள்.
தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால்தான்  2026-ஆம் ஆண்டு வரை எம்.பி.க்கள்எண்ணிக்கை  உயர்த்தப்படாது. இதில் பயப்பட அவசியமே இல்லை. எங்களைப் பொறுத்தவரை வருங்காலத்திலும் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்றே பாஜக செயல்படும். இப்போதைக்கு யாரும் கவலைப்பட தேவையில்லை. இப்போது சீர்திருத்தம் எதுவும் நம்முடைய கண் முன் இல்லை. 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்த்தப்படலாம். இதற்கு 2031 மக்கள் தொகையை அடிப்படையாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது” என்று எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.

click me!