தனித்து நின்று டெபாசிட்! அதிமுக கூட்டணியில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்படுகிறதா பாஜக?

By Selva KathirFirst Published Aug 21, 2020, 10:29 AM IST
Highlights

கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை தனியாக நின்று டெபாசிட் வாங்க முடியுமா என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விடுக்கப்பட்டுள்ள சவால் தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வை தெரிவிப்பது போல் உள்ளது.
 

கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை தனியாக நின்று டெபாசிட் வாங்க முடியுமா என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விடுக்கப்பட்டுள்ள சவால் தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வை தெரிவிப்பது போல் உள்ளது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் ஊர்வலங்களை அனுமதித்துள்ள கர்நாடக எடியூரப்பா அரசை ஆண்மையுள்ள அரசு என்று ஹெச்.ராஜா பாராட்டியிருந்தார். இதன் மூலம் தமிழக எடப்பாடியார் அரசை ஆண்மையற்ற அரசு என்று ஹெச்.ராஜா மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இதனை பார்த்து அதிமுகவினர் கொந்தளித்து தீர்த்துவிட்டனர். ஹெச்.ராஜாவுக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ராஜ் சத்யன், கோவை சத்யன் ஆகியோர் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்தனர்.

இதற்கு பாஜக சமூக வலைதள பிரிவு நிர்வாகிகள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதன் மூலம் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் மிக கடுமையான வார்த்தை யுத்தங்களை தொடுத்துள்ளன. இந்த வார்த்தை யுத்தத்தின்
போது இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் எதிர்எதிர் கட்சிகளின் தலைவர்களை மிக கடுமையான வார்த்தைகளால் மிக அவமானகரமான பொருளில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் உண்மையில் பாஜகவும் –அதிமுகவும் கூட்டணியில் தான் உள்ளனவா என்கிற கேள்வி எழுந்தது. ஏனென்றால் எடப்பாடியார் அரசை ஆண்மையுள்ளதா என்று மிக மிக கடுமையான வார்த்தையை முன் வைத்து ஹெச்.ராஜா சீண்டினார்.

இதற்கு பதிலடியாக ஆண்மை என்றால் என்ன தெரியுமா? என பாஜகவினருக்கும் ஹெச்.ராஜாவுக்கு அதிமுகவினர் பாடம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நோட்டாவோடு போட்டி போடுபவர்களின் தனிப்பட்ட மதவெறிக்காக எல்லாம் தொற்றுநோய்க்காலத்தில் தமிழக அரசு மக்களைப் பணயம் வைக்காது! வெறும் வாய்ப்பேச்சில் காட்டும் வீரத்தை தமிழ்நாட்டில் தனித்து நின்று டெபாசிட்டாவது வாங்கி தங்கள் ஆண்மையை நிரூபிக்கவேண்டும்!

இந்த இரண்டு வரி பதிலில் முதல் வரியுடன் அதிமுக முடித்துக் கொண்டிருக்கலாம். ஏனென்றால் அந்த வார்த்தையே பாஜகவை மதவெறியுள்ள கட்சி என்று விமர்சித்துள்ளது. இதுவே கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்று கூறலாம். ஏனென்றால் கூட்டணியில் உள்ள ஒரு கட்சியை மதவெளி உள்ள கட்சி என்று அதிகாரப்பூர்வ தளத்தில் விமர்சிப்பது கூட்டணி ஆரோக்கியமாக உள்ளது என்று கூறுவதை பொய்யாக்குவதாகும்.

ஆனால் அடுத்த வரியை பார்க்கும் போது தான் கூட்டணியில் இருந்து பாஜகவை அதிமுக கழுத்தை பிடித்து தள்ளுகிறதா  என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சிக்கு 5 இடங்களை ஒதுக்கியது அதிமுக. அப்படி இருக்கையில் அந்த கட்சி தனித்து போட்டியிட்டு நோட்டாவை வெல்ல முடியுமா என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவிற்கு வாக்கு
வங்கியே இல்லை என்பதை தெரிவித்துள்ளதுடன் முடிந்தால் தனித்து போட்டியிடுங்கள் என்றுஅதிமுக பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இப்படி ஒரு பதிவை போட வேண்டும் என்றால் அதற்கு மேலிட அனுமதி கட்டாயம்.

அப்படி அனுமதி இல்லாமல் போடப்பட்டிருந்தால் இந்நேரம் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் பாஜகவிற்கு விடுக்கப்பட்ட சவால் அதிமுக மேலிடத்தின் அனுமதியுடன் விடுக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. அப்படி என்றால் கூட்டணியை விட்டு பாஜகவை கழுத்தை பிடித்து அதிமுக தள்ள தயாராக உள்ளதா என்கிற கேள்வி இந்த ட்வீட் மேலும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

click me!