
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிச. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.
எந்தத் தொகுதி இடைத்தேர்தலை வைத்து சின்னம் பறிபோனதோ அதே தொகுதி இடைத்தேர்தலை வைத்தே அதிமுக., மீண்டும் இரட்டை இலையைப் பெற்று, அக்னிப் பரீட்சையில் இறங்குகிறது.
இந்நிலையில், சின்னம் பறிபோய் விட்ட நிலையில், தனக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தில் போட்டியிடப் போவதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். அதற்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அவருக்கு தொப்பி சின்னம் கிடைக்காது என்று கூறியிருந்தார்.
இதை அடுத்து தமிழிசையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், இவர் என்ன தேர்தல் ஆணையத்தின் அதாரிடியா என்று கேட்டிருக்கிறார் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, வரும் 27-ஆம் தேதி திருச்சியில் தினகரன் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் ...
சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி, வரும் 29-ம் தேதி எங்கள் அணி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். தொப்பி சின்னம் வழங்கக்கூடாது என தமிழிசை கூறுகிறார் என்றால், தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்து, மீண்டும் நாங்கள் தொப்பி சின்னத்தை கேட்டுப் பெறுவோம் என்று கூறிய தங்க தமிழ்ச்செல்வன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை, மத்திய அரசு கட்டாயப்படுத்தி சேர்த்து வைத்துள்ளது என்று கூறினார்.