தமிழ்நாடு 3 மாநிலங்களாக பிரிகிறதா..? கொங்குநாடு மூலம் பிள்ளையார் சுழி போகிறதா மத்திய அரசு..?

By Thiraviaraj RMFirst Published Jul 10, 2021, 12:51 PM IST
Highlights

தமிழகத்தில் இன்னும் சில நாடுகளை, அதாவது மாநிலங்களை மத்திய அரசு உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு இது வலுச் சேர்ப்பதாக உள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டபோது, அவரைப் பற்றிய சுயவிவர குறிப்பில், அவர் தமிழ்நாட்டின் கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இது அரசியல் வட்டாரத்தில், பெரும் பேசுபொருளாக மாறியது. பிரதமர் அலுவலகம் மூலம்தான் எல். முருகன் பற்றிய சுய குறிப்பு தயாரிக்கப்பட்டு இருக்கும்.
இதுபோன்ற தகவல்களை பிரதமர் அலுவலகம் தன்னிச்சையாக சேர்த்து விடுவதில்லை. ஒருவர் எழுதிக் கொடுக்கும் குறிப்புகளின் அடிப்படையிலேயே, அது தயாரிக்கப்படும். எனவே கொங்கு நாடு என்பதை எல்.முருகன் எழுதிக் கொடுத்த பயோடேட்டா படிதான், பிரதமர் அலுவலகம் அதை சேர்த்திருக்கும். எனவே எல்.முருகன் தன் விருப்பத்தின் பேரில்தான் கொங்கு நாடு என்று குறிப்பிட்டிருக்கிறார், என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
 
இதையொட்டி வேறு சில கேள்விகளும் அரசியல் சட்ட வல்லுனர்களால் எழுப்பப்படுகிறது. தமிழ்நாட்டின் கொங்கு நாடு என்கிறபோது தமிழகத்தில் வேறு சில நாடுகளும் உள்ளன என்று அர்த்தமாகிறது. தமிழகத்தில் நாடு என்ற பெயரில் ஏராளமான ஊர்கள் உள்ளன. அதனால் கொங்கு நாடு என்பதை ஒரு ஊர் என்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே கொங்கு மண்டலம் என்பதுதான் கொங்கு நாடு எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது, என்பது தெளிவாகிறது. அது மட்டுமின்றி, தமிழகத்தில் வேறு எந்தெந்த நாடுகள் உள்ளன என்றொரு பூடகமான கேள்வியும் இதில் எழுகிறது.

ஏற்கனவே, தமிழகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் எழுப்பி வருகிறார். அவருடைய இந்த யோசனையை மத்திய அமைச்சர் எல்.முருகன் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றே கருதத்தோன்றுகிறது. எனவே கொங்கு நாடு என்பது போல தமிழகத்தில் இன்னும் சில நாடுகளை, அதாவது மாநிலங்களை மத்திய அரசு உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு இது வலுச் சேர்ப்பதாக உள்ளது.

 மத்திய அரசு ஒரு மாநிலத்தை பிரித்து ஒன்றிரண்டு மாநிலங்களை உருவாக்க முயன்றால் அதை தடுப்பது கடினம். அதுபோல கொங்கு நாடு கோரிக்கை வலுப்பெற்று விட்டால் அதை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை அளிக்கலாம். ஏனென்றால் மக்கள் தொகையின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும் மாநிலத்தை இரண்டாகவும், மூன்றாகவும் பிரிக்கிறோம் என்று மத்திய அரசால் காரணம் கூற முடியும். அப்படி ஒரு வேளை தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க நேர்ந்தால் கொங்கு நாடு, வடதமிழ்நாடு, தென் தமிழ்நாடு என 3 மாநிலங்கள் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி கோவையை தலைநகராகக் கொண்ட புதிய கொங்கு நாடு மாநிலத்தில் கோவை, சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஆகிய 10 மாவட்டங்கள் இடம் பெறக்கூடும். சென்னையை தலைநகராக கொண்டு அமையலாம் என்று கூறப்படும் வட தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்கள் சேர்க்கப்படலாம்.

மதுரையை தலைநகராக கொண்டு அமையும் தென் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
 
இப்படி மாநிலங்களை 3 ஆக பிரிக்கும்போது, லாபங்கள் அதிகம். நஷ்டங்கள் குறைவு. பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆட்களாகி திருமணத்திற்குப் பின்பு தனிக்குடித்தனம் போக விரும்புவது போலத்தான் மாநிலங்கள் பிரிப்பு என்பதும். கோவையும், மதுரையும் தொழில் வளர்ச்சிக்கான முன்னேற்றத்தை இன்னும் வேகமாக காண வாய்ப்பு உண்டு. மாநில சட்டப்பேரவைகளும் தனித்தனியாக அமையும். தற்போது தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளும் மக்கள் தொகையின் அடிப்படையில் புதிய மாநிலங்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்படும். சட்டப் பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை சற்று கூடவும் செய்யலாம்.
 
மதுரையில் உயர்நீதிமன்றம் இருப்பது போல் கோவைக்கும் உயர்நீதிமன்றம் வரும். நிர்வாகச் சுமை பகிரப்படும். எங்கள் மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது என்று யாரும் குறை கூற முடியாது. 3 மாநிலங்களும் போட்டி போட்டு முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பும் உள்ளது என்கிறார்கள் இதுகுறித்து விவாதிப்பவர்கள்.

click me!