ஒரே கையெழுத்தில் நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற முடியும் என கூறிவிட்டு, தற்போது மக்களிடம் கையெழுத்து கேட்பது ஏன்? உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டும் என விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு- கையெழுத்து இயக்கம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய கையெழுத்து இயக்கம் தொடர்பாக விளக்கம் கேட்கும் விதமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
திமுகவினர் நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் நாடகத்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஒரு பேச்சாக உள்ளது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவோம் என திமுக தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளனர் இது மிகப்பெரிய அரசியல் நாடகம்.மக்களின் கேள்விக்கு பயந்து இதுபோன்று செயல்படுகின்றனர்.
இண்டியா கூட்டணியிடம் கையெழுத்து வாங்குமா.?
நீட் தேர்விற்கு எவ்வாறு விலக்கு பெற போகிறீர்கள் என்று அதிமுக சார்பில் அப்போதே கேட்டோம். ரகசியம் அதை சொல்ல மாட்டோம் என் திமுகவினர் தெரிவித்தனர். கையெழுத்து இயக்கம் தொடங்குவது தான் நீட் ஒழிப்பிற்கான ரகசியமாக?என கேள்வி எழுப்பினார். நீட் என்பது விஷ விதை என்றால் அது காங்கிரஸ்-திமுக ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது.
நீட்,ஜல்லிக்கட்டு ஆகியவற்றில் பாதகம் செய்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியுடன் தான் திமுக கைகோர்த்து உள்ளது என்றார்.நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியிடம் கையெழுத்து இயக்கத்தின் மூலம் திமுக கையெழுத்து வாங்குமா? எனவும்,இண்டியா கூட்டணியில் உள்ள 26 கட்சிகளிடமும் திமுக நீட் தேர்விற்கு விலக்கு பெற கையெழுத்து வாங்குமா என்பதை விளக்க வேண்டும் என்றார்.
நிரந்தர தடை பெற முடியாது
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு மிகப்பெரிய அரசியல் அழுத்தமும் ,சட்டப் போராட்டமும் தான் தேவை. கையெழுத்து இயக்கம் தொடங்குவதால் எந்த பயனும் இல்லை. திமுகவுடன் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை கொடுக்கவேண்டும். ஆனால் திமுக அதுபோன்று அரசியல் அழுத்தத்தை ஏன் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அதிமுக உறுதியாக உள்ளது. வலிமையான சட்ட போராட்டம் மற்றும் மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை கொடுக்கும் போது அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம்.நீட் தேர்வில் இருந்து நிரந்தர தடை பெற முடியாது பல மாநிலங்களில் நீட் தேர்வு ஏற்றுக் கொண்டனர் அதனால் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு மட்டுமே கேட்க முடியும் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்