
காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைவிட ஸ்டாலின்தான் முக்கியம் போல தோன்றுகிறது என்று தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலையை திமுக கொண்டாடி வருகிறது. தன்னிடம் நன்றி தெரிவிக்க வந்த பேரறிவாளவனை அரவணைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் வாயில் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரறிவாளனை முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்டியணைத்ததை வைத்து திமுக கூட்டணியை விட்டு வெளியேற காங்கிரஸ் தயாரா என்று பாஜக சீண்டி வருகிறது.
இந்நிலையில் பாஜக வழியில் ஜி.கே. வாசனை தலைவராகக் கொண்ட தமாகாவும் காங்கிரஸை சீண்டத் தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பாக தமாகா இளைஞர் அணி தலைவர் எம். யுவராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த 2011-ஆம் ஆண்டில்ல் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக நான் இருந்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைக் கண்டித்து, ராஜீவ் காந்தியுடன் உயிர் நீத்த குடும்ப உறுப்பினர்களை அழைத்து சென்னை மெரினா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தி எங்களை கைது செய்தனர். அன்று எங்களுக்கு இருந்த உணர்வுக்கூட இன்று காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு இல்லை. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைவிட ஸ்டாலின்தான் முக்கியம் போல தோன்றுகிறது.” என்று அறிக்கையில் யுவராஜா தெரிவித்துள்ளார்.