பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியில் இருப்பதா.? எதிர்ப்பு தெரிவித்த காங். மாவட்ட தலைவர் ராஜினாமா!

By Asianet TamilFirst Published May 19, 2022, 10:29 PM IST
Highlights

 “உலகம் போற்றும் உத்தம தலைவர் அமரர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலை குற்றவாளியைக் கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை."

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியைத் தொடரக் கூடாது என்று தருமபுரி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலையை திமுக கொண்டாடி வருகிறது. தன்னிடம் நன்றி தெரிவிக்க வந்த பேரறிவாளவனை அரவணைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் வாயில் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரறிவாளனை முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்டியணைத்ததை வைத்து திமுக கூட்டணியை விட்டு வெளியேற காங்கிரஸ் தயாரா என்று பாஜக சீண்டி வருகிறது.  பேரறிவாளன் விடுதலையாலும் திமுகவினரின் கொண்டாட்டத்தாலும் கடும் அதிருப்தியடைந்துள்ள காங்கிரஸ், கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கிறது. அதே வேளையில் திமுக கூட்டணிக்குப் பங்கம் வராத வகையில் அந்த விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரிக்கு சிற்றரசு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “உலகம் போற்றும் உத்தம தலைவர் அமரர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலை குற்றவாளியைக் கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே, நான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிகொள்கிறேன். எனது பதவி விலகலை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அந்தக் கடிதத்தில் சிற்றரசு குறிப்பிட்டுள்ளார்.

click me!