ராஜீவ் கொலையாளிகளை சோனியா-ராகுல் மன்னிக்கலாம்.. காங்கிரஸ் தொண்டர்களின் மன்னிப்பு கிடையாது.. நாராயணசாமி பொளேர்!

By Asianet TamilFirst Published May 19, 2022, 9:54 PM IST
Highlights

இந்திய அரசின் எதிர்கால விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர்தான் ராஜீவ் காந்தி. வெளியுறவு, அணுகுண்டு கொள்கையில் திறம்பட செயலாற்றினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மன்னிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலையை திமுக கொண்டாடி வருகிறது. தன்னிடம் நன்றி தெரிவிக்க வந்த பேரறிவாளவனை அரவணைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடுத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தால் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்துதான் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோதும் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்தியது. தஙளுடைய தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையைக் காலதாமதம் செய்ததால் உச்ச நீதிமன்றம் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஆக்கியது. அதன்பிறகு விடுதலை செய்யக் கோரிக்கை வைத்தார்கள்.

இந்த விஷயத்தில் நாங்கள் தொடர்ந்து பலமுறை சொல்லி வந்திருக்கிறோம். இந்திய அரசின் எதிர்கால விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர்தான் ராஜீவ் காந்தி. வெளியுறவு, அணுகுண்டு கொள்கையில் திறம்பட செயலாற்றினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இந்திய வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். அவரை இழந்துள்ள நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அவர்களை மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் என்ற முறையில் நாங்கள் மன்னிக்க மாட்டோம்" எனறு நாராயணசாமி தெரிவித்தார்.

click me!