
ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய மாட்டார், அது தவறான செய்தி என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ‘மோடி எங்கள் டாடி’, ‘மோடி இருக்கும் வரை யாரும் எங்களை மிரட்ட முடியாது!’ என்றெல்லாம் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் அரசியல் கூட்டங்களில் ராஜேந்திர பாலாஜி பேசி வந்தார். முன்னதாக, 2020-ல் சிறுபான்மையினத்தவருக்கு எதிராகப் பேசியதாலும், மூத்த அமைச்சர்களை மதிக்காமல் அதிமுகவின் கொள்கைகள் குறித்து பேட்டி அளித்து வந்ததாலும் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை அதிமுக தலைமை பறித்தது. பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார் ராஜேந்திர பாலாஜி. சொத்துக்குவிப்பு வழக்கு, ஆவின் முறைகேடு என பிடி இறுகுவதால் அவர் பாஜக-வில் இணைய இருப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய மாட்டார், அது தவறான செய்தி எனத் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நிதிநிலை சிராக இருந்ததாக கூறப்படுவது தவறானது. திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தான் அவர்களின் செயல்பாடுகள் தெரியவரும். திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகிறது. ஆனால் என்ன புதிய திட்டங்களை கொண்டு வந்தார்கள்.ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு இப்போது அடிக்கல் நாட்டுகிறார்கள்.
பெட்ரோல் விலை ரூ 5 குறைக்கப்படுவதாக திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? பட்ஜெட் தாக்கல் செய்யும்போது செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறைதான்; அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது என்பது தவறான கருத்து. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை; சட்டமன்றத்தையே 100 நாட்கள் கழித்துதான் கூட்டுகின்றனர்’’ என திமுக ஆட்சியை அவர் விமர்சித்தார்.