தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது தமிழகத்தின் ஆளுங்கட்சியின் உடைய துணையோடு தான் கள்ளச்சாராயம், கஞ்சா போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் அதிமுக மாநில மாநாடு
மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநில மாநாட்டிற்கான முதல்கட்ட உள்கட்டமைப்பு பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு செய்தனர். மதுரை விமான நிலையம் அருகில் உள்ள வலையங்குளம் கருப்புசாமி கோவில் எதிரே மாநாடு நடைபெறுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நில உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, தமிழகம் தழுவிய மிகப் பெரிய மாநாடு நடைபெறுகிறது. இதில் ஒட்டுமொத்த கழகத் தொண்டர்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்காக மாநாட்டை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி
திராவிட இயக்கத்திற்கு தூணாக இருந்தது மதுரை மாவட்டமாகும்,பேறிஞர்அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, தற்போது எடப்பாடியார் காலம்வரை உண்மையான தொண்டர்கள் இருக்கக்கூடிய இயக்கம் அதிமுக தான் உண்மையான ஜனநாயகம் உள்ள இயக்கம் அதிமுக தான். தமிழகம் முழுவதுமே இந்த அதிமுகவின் மாநாட்டை பற்றி தான் பேசி வருகிறார்கள். எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஒரு பார் போற்றும் மாநாடாக அமையும் என குறிப்பிட்டார். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வெற்றிப்படியாக இந்த மாநாடு அமையும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி கட்டிலை மாற்றக்கூடிய மாநாடாக அமையும் எனவும் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் விற்பது தான் திராவிட மாடலா.?
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளதாக குறிப்பிட்டவர், தமிழகத்தின் ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம், கஞ்சா போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டத்தில் 25 பேர் இறந்து இருப்பது மிகப்பெரிய வேதனை என குறிப்பிட்டவர், திராவிட மாடல் என்றால் கஞ்சா, போதை பொருள் விற்பனை செய்வது தான் என விமர்சித்தார். தமிழக முதல்வர் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவை சுதந்திரமாக செயல்பட விட்டால் தமிழகம் முழுவதும் மூளை முடுக்கு எங்கும் கஞ்சா போதை பொருட்கள் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறாது என தெரிவித்தார். இந்த ஆட்சியை மக்களால் வெறுக்கப்படுகின்ற ஆட்சியாக தான் இருக்கிறது திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக தான் அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்