ஜெ. எழுதிய உயில் எங்கே...!? சல்லடை போடும் அதிகாரிகள்... பதற வைக்கும் பகீர் ரிப்போர்ட்! 

Asianet News Tamil  
Published : Nov 11, 2017, 03:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
ஜெ. எழுதிய உயில் எங்கே...!? சல்லடை போடும் அதிகாரிகள்... பதற வைக்கும் பகீர் ரிப்போர்ட்! 

சுருக்கம்

Is IT search based on jayalalithas will questions about poes garden too

கடந்த மூன்று நாட்களாக தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கி எடுக்கும் வகையில் அரசியல் மட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்தப்பட்ட  வருமான வரி சோதனைதான். இன்னும் இந்த சோதனை நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, இந்த சோதனை ஏன் என்பது குறித்து பல்வேறு மட்டங்களில் பலரும் பல விதமாக யூகங்களை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

அண்மையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், போலி நிறுவனங்களின் பதிவுகள் குறித்து மத்திய அரசு கண்டறிந்தது. இவற்றில், சசிகலாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அதிகம் இருந்துள்ளன. இதை அடுத்தே இந்த சோதனைகள் குறித்து திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி,  சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்களின்  வீடுகள், அலுவலகங்களில் மூன்றாவது நாளாக தொடரும் மெகா வருமான வரித் துறை சோதனை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூலம் ஒரே ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட , அதுவும் 187 இடங்களில் வருமான வரித் துறையினர் மூலம் நடத்தப்பட்ட அதிரடி சோதனை இதுதான்.

இந்த சோதனையின் போது, ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. என்னென்ன ஆவணங்கள், பொருள்கள், பணம் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை அதிகாரிகள் எதையும் குறிப்பாக அறிவிக்கவில்லை. ஆனால், அவை அனைத்தையும் வைத்துக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு பின்னரே தகவல்களை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால், அவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறும் சிலர், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ், விஜயபாஸ்கர், குட்கா விவகாரம் என பல்வேறு நபர்கள் மீது இப்படித்தான் விறுவிறுவென்று சோதனை நடத்தினார்கள். அவற்றின் விளைவுகள் அல்லது, அதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் என்ன? எனவே இவையெல்லாம் ஒரு நாடகம்தான் என்று கூறுகின்றனர். 

இருப்பினும், சசிகலா குடும்பத்தினர் மீதான சோதனை நடவடிக்கை என்பது, பழிவாங்கல் நடவடிக்கைதான் என்று தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தீவிரப் பிரசாரம் செய்து வரும் நிலையில்,  சேகர் ரெட்டி,ராம் மோகன் ராவ் உள்ளிட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் எல்லாம் என்ன அரசியல் பழிவாங்கலா? எனவே, சசிகலா மீதான வருமான வரி சோதனையை பழிவாங்கும் நடவடிக்கை என்றெல்லாம் கதை கட்டி விடுவது வியப்பளிப்பதாகக் கூறுகின்றனர்.  

எப்படியும் இந்த சோதனையின் போது, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள், ஏராளமான நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சொத்துக்கள்  வாங்கப்பட்ட விதம், இவற்றின் வருமானத்துக்கான வழிகள் என்னவாக இருக்கும் போன்ற  விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். 

இது எல்லாம் வழக்கமான சோதனைதானே, எப்படியும் வழக்கறிஞர்கள் மூலம், சரிக்கட்டும் இடத்தில் சரிக்கட்டி, எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்றுதான் தினகரன் இந்த சோதனையை எதிர்கொண்டு, நாங்கள் இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை என்று கூறியிருந்தார்.  ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளும் விசாரணைகளும் வேறு எங்கெல்லாமோ சென்று வருவது கண்டு, உண்மையில் அதிர்ந்து தான் போயிருக்கிறார்கள் சசிகலா குடும்பத்தினர்.  

சோதனை துவங்கிய முதல்நாளே, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற விவகாரம் அடங்கிய ஒரு கேசட்டுக்காகத்தான் இந்த சோதனை என்று ஒரு செய்தியை தினகரன் ஆதரவாளர் மூலமே ஊடகங்களில் சொல்ல வைத்தார்கள். அது திசை திரும்பிய நிலையில், இப்போது விசாரணை அதை ஒட்டிய வேறு ஒன்றை மையப் படுத்தி மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள். 

இந்த வீடியோ விவகாரம், வேறு வகையில் வெளிப்பட்டது. புகழேந்தி, ஜெயலலிதா குறித்த வீடியோ பதிவு இருப்பதாக  முன்னர் தெரிவித்திருந்தார். அப்படி எனில் அதனைக் கொடுக்குமாறு புகழேந்தியிடம் கேட்டனர் அதிகாரிகள். ஆனால்,  அவர் இது குறித்து தனக்குத் தெரியாது என்றும் வீடியோ தன்னிடம் இல்லை என்றும் கூறிவிட்டார். இதன் பின்னர், புகழேந்தியின் குடும்பத்தினரிடமும் ஏதாவது தகவல் கிடைக்காதா என்ற ரீதியில்  விசாரணை நடத்தியுள்ளனர்.

சோதனையின் துவக்கத்தில் சொத்துகள், போலி நிறுவனங்கள் என்று இயங்கியவர்கள், ஏன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வீட்டிலும் போய் சோதனைக்கு இறங்க வேண்டும் என்பதுதான் பெரிய கேள்விக் குறி. அப்படி,  டாக்டர் சிவக்குமார் வீட்டில் நடந்த சோதனையில் ஜெயலலிதா உடல்நிலை, மருத்துவக் குறிப்புகள், அவர் தனது கம்ப்யூட்டரில் என்னென்ன வைத்திருக்கிறார் என்பதை ஆய்வு செய்தனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இருந்த நிலை, அப்போதைய நிலவரம் என்றும் கூட இந்த சோதனைகள் நீண்டுள்ளன.   

இதனிடையே, இரண்டு விவகாரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. ஒன்று, ஜெயலலிதாவின் உயில். அடுத்தது, தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்பட்ட கண்டெய்னர் பணம் குறித்தானது. அதாவது, ஜெயலலிதா எழுதிய உயில் எங்கே? அவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள், அதற்கான மூல ஆவணங்கள் எங்கே இருக்கின்றன... இதுதான் இப்போதைய கேள்விகள். தேடல்கள் என்கிறார்கள். 

போயஸ் தோட்ட வீடு தொடங்கி, அவரது பலவித சொத்துகள் குறித்து ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளார் என்று கூறப்படும் நிலையில், சசிகலா அண்மையில் சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த அந்த ஐந்து நாட்களில், பல்வேறு பத்திரங்களில் கையெழுத்திட்டு, உறவினர்கள் பலருக்கு சொத்துகள் மாற்றப்பட்டதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த சோதனையின் மையப் புள்ளி உயிலாகவே இருக்கக் கூடும்! 

PREV
click me!

Recommended Stories

சமூகநீதியா..? சவப்பெட்டியா..? ஸ்டாலினை அதிரவைக்கும் நாடார் சங்க போஸ்டர்..!
60 தொகுதிகளில் செக்...! அண்ணாமலையின் கொங்கு ஸ்கெட்ச்..! அலறும் அதிமுக..!