சேலத்தை இரண்டாகப் பிரிக்க திட்டமிடுகிறதா திமுக.? யோசனை கூறிய கூட்டணி கட்சி.. பரபரப்பு கிளப்பிய கே.என். நேரு!

By Asianet TamilFirst Published Jan 3, 2022, 8:34 PM IST
Highlights

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. எனவே, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. சேலம் மாவட்டம் பொறுப்பு அமைச்சராக கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவிப்பேன் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சேலத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், “சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் விவசாயிகள் பலருக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.  கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் பயனடையும் வகையில், திருமணிமுத்தாறு மேம்பாட்டுத் திட்டத்துக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். சேலம்- உளுந்தூர்பேட்டை4 வழிச்சாலையில், போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்” என்று ஈஸ்வரன் பேசினார்.

 

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சேலம் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு பேசுகையில், “சேலம் மாவட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாவட்டம் ஆகும். எனவே, அந்த மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் தெரிவிப்பேன்.” என்று கே.என். நேரு பேசினார். சட்டப்பேரவைத் தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. எனவே, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. சேலம் மாவட்டம் பொறுப்பு அமைச்சராக கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், சேலத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக முதல்வரிடம் தெரிவிப்பதாகப் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!