சென்னையில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் தரமானதாக இருக்கிறதா என்று நடுராத்திரியில் சாலைகளில் வலம் வந்து சோதித்து இருக்கிறார் தலைமை செயலாளர் இறையன்பு.
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் தரமானதாக இருக்கிறதா என்று நடுராத்திரியில் சாலைகளில் வலம் வந்து சோதித்து இருக்கிறார் தலைமை செயலாளர் இறையன்பு.
undefined
ஐஏஎஸ் அதிகாரிகளில் சற்று வித்தியாசமானவர் இறையன்பு. வெகுஜனங்களின் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதனை தீர்த்து வைப்பதில் அதிக அக்கறை கொண்டவர். ஐஏஎஸ் என்பதை தாண்டி எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர் என பெருமை பெற்றவர்.
பாரபட்சமற்ற பணி, மேலாண்மை, நேர்மை என்ற பெயர் பெற்றவர் தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரின் செயல்பாடுகள் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மிகுந்த நிர்வாகத்திறன் கொண்ட அவர் நேற்றிரவு சென்னை சாலைகளில் இறங்கி அதுவும் நடுராத்திரியில் சென்று சாலைகள் எவ்வாறு சீரமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை ஆய்வு நடத்தி அசர வைத்திருக்கிறார்.
சென்னையை புரட்டி போட்ட வடகிழக்கு பருவமழையால் சாலைகள் படுகுழிகளாக மாறி போனது. பல்லாங்குழி சாலைகளாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருவதில் பல்வேறு சிரமத்தை சந்தித்தனர். வாகனத்தை மட்டும் அல்லாமல் அதை ஓட்டி வந்தவர்களின் உடல்நிலையையும் பாடாய்படுத்தும் அளவுக்கு சாலைகள் காட்சி அளித்தன.
தொடர் கோரிக்கைகளை அடுத்து மழையால் பல்லிளித்து கிடக்கும் சாலைகளை செப்பனிடும் பணிகள் துவங்கி உள்ளன. ஆனால் இந்த சாலைகள் பழுது பார்க்கும் தருணத்தில் போதிய ஆய்வு பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதால் செப்பனிட்ட சில வாரங்களில் மீண்டும் சேதம் அடைந்துவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
தற்போது மாநகராட்சியின் கீழ் 470 பிரதான சாலைகள், 34,600 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சாலைகளில் பல, அதன் ஆயுட்காலம் முன்பே சேதம் அடைந்து விடுகின்றன என்பது பொதுமக்களின் புகாராக உள்ளது.
இப்படி எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக்கையாக சென்னையில் தற்போது போடப்பட்டு சாலைகளை எவ்வாறு உள்ளன? தரமானவையாக இருக்கிறதா? என்று அதிரடி ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார் தலைமை செயலாளர் இறையன்பு.
சென்னையில் 173வது வார்டுக்கு உட்பட்ட டிஜிஎஸ் தினகரன் சாலையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நள்ளிரவு நேரத்தில் இந்த பகுதிக்கு சென்ற இறையன்பு அவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தி இருக்கிறார்.
சேதம் அடைந்த சாலைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா? புதிய சாலைகளின் உயரம் சரியான முறையில் உள்ளதா? சாலைகள் போடும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்தி உள்ளார்.
நடுராத்திரியில் இறையன்பு திடீரென சாலைகளின் தரத்தை பரிசோதித்த பார்க்க ஆய்வு நடத்தியது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
தலைமை செயலாளர் இறையன்புவின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் இரவு நேரத்தில் அவரின் இந்த ஆய்வு பணி, அதிகாரிகளுக்கு பெருத்த அதிர்ச்சியாக உள்ளது. அதிகாரிகள் தரப்பு அரண்டு போய் இருந்தாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.