Goa : பாஜகவை பின்னுக்கு தள்ளி... கோவாவை அசால்ட்டாக கைப்பற்றுமா காங்கிரஸ்..? மோடி-ஷா பிளான் என்ன...?

By Raghupati RFirst Published Jan 11, 2022, 7:02 AM IST
Highlights

கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அங்கு தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே பிரசாரக் கூட்டங்களை கட்சிகள் பலவும் ஆரம்பித்து விட்டன. 

குறிப்பாக காங்கிரஸ் இந்த முறை தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை கோவாவில் அதற்கு கடந்த 2017 தேர்தலுக்குப் பிறகு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  உண்மையில் காங்கிரஸ்தான் அதிக இடங்களில் வென்றது.தனது ராஜதந்திரத்தால் காங்கிரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கிவிட்டு, ஆட்சியில் அமர்ந்தது பாஜக.தற்போது அப்படி நேர்ந்து விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் படு கவனமாக இருக்கிறது. 

அக்கட்சியைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு விலகி திரினமூல் காங்கிரஸில் சேர்ந்தும் கூட காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை. காரணம், மக்களின் மன நிலை இந்த முறை தனக்கு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் திடமாக நம்புகிறது. பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பதும் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது.  இந்தநிலையில் கோவா மாநிலத்தின் அமைச்சர் மைக்கேல் லோபோ தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் கட்சியிலிருந்தும் விலகியுள்ளார். 

அண்மையில் பாஜகவில் இருந்து இரண்டு கிறிஸ்துவ எம்.எல்.ஏக்கள் விலகிய நிலையில், மூன்றாவது கிறிஸ்துவ எம்.எல்.ஏ.வாக மைக்கேல் லோபோ கட்சியிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மைக்கேல் லோபோவின் விலகல், கோவா மாநிலத்தின் ஆறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.  சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மைக்கேல் லோபோ விலகியிருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ.வான பிரவின் ஜான்டியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால், பிரவின் ஜான்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவர்களின் ராஜினாமா கோவா தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். கோவா முதல்வரான பிரமோத் சாவ்ந்த் மீது மக்கள்  ஏற்கனவே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கருத்துகணிப்பின்படி, பாஜக முன்னிலையில் இருந்தாலும் யார் வெற்றி பெறுவார்கள் ? என்று தேர்தல் முடிவுகளின் போதுதான் தெரியும்.

click me!