ஈஷாவிற்கு எதிராக விசாரணை குழு..! உண்மையை தெளிவுபடுத்திய அமைச்சர் சேகர்பாபு..!

By Selva KathirFirst Published May 12, 2021, 11:35 AM IST
Highlights

நில அபகரிப்பு புகார், வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு என்கிற புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழக அறநிலையத்துறை குழு அமைத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நில அபகரிப்பு புகார், வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு என்கிற புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழக அறநிலையத்துறை குழு அமைத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

திமுக ஆட்சிஅமைந்த சில நாட்களிலேயே ஈஷாவிற்கு எதிராக விசாரணை நடத்த அமைச்சர் சேகர்பாபு குழு அமைக்கப்படும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. வாட்ஸ்ஆப், ட்விட்டரில் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்து சில முன்னணி ஊடகங்களும் அதனை செய்தியாக வெளியிட்டன. இதற்கு காரணம் தேர்தலுக்கு முன்பாக கோவில் அடிமை நிறுத்து என்கிற ஒரு இயக்கத்தை ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நடத்தியிருந்தார். அதாவது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உரிய பராமரிப்பின்றி இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

மேலும் சுமார் 22ஆயிரம் இந்து மத கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை என்றும் ஜக்கி வாசுதேவ் தெரிவித்திருந்தார். எனவே கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு வழக்கம் போல் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிக் கொள்ளும் திராவிடர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தோடு ஈஷா மையத்தை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் பின்னணியில் தேர்தல் நடைபெற்று திமுக ஆட்சிக்கு வந்தது.

திமுக ஆட்சியில் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்று சேகர்பாபு கூறியதாக தகவல்கள் பரபப்பட்டன. இந்த தகவல்களை பெரும்பாலும் திராவிட கழக ஆதரவாளர்கள், பெரியார் ஆதரவாளர்கள் பரப்பினர். ஆனால் அப்படி சேகர்பாபு எங்கு எப்போது பேசினார் என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து இந்த தகவல்களை பரப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈஷா யோகா மைய மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு ஏதும் அமைக்கப்பட்டுள்ளதாக என்கிற கேள்விக்கு நேரடியாக அவர் பதில் அளிக்கவில்லை. அதே சமயம் திமுக ஆட்சியில் தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது என்று மட்டும் அவர் கூறியிருந்தார். அதே போல் தமிழகத்தில் சுமார் 22ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை என்கிற ஜக்கியின் புகார் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒரு ஆண்டு எங்களுக்கு அவகாசம் கொடுங்கள், எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுவதாக சேகர் பாபு பதில் அளித்தார்.

ஆனால் எங்குமே ஈஷா மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஈஷாவிற்கு எதிராக குழு அமைக்கப்படும் என்றோ அவர் கூறவில்லை. ஆனால் உண்மை இப்படி இருக்க வழக்கம் போல் தங்களை முற்போக்குவாதிகள் என்று கூறிக் கொள்ளும் சிலர் வாட்ஸ்ஆப் வதந்தியை வதந்தி என்று தெரிந்தும் பரபபி வருகின்றனர்.

click me!