திமுகவில் உட்கட்சி மோதல்..! பதவி விலகினார் பிடிஆர்..? பின்னணி என்ன..?

By Thiraviaraj RMFirst Published Jan 10, 2022, 5:23 PM IST
Highlights

கட்சிப் பதவியை விட்டுக்கொடுக்கும் எண்ணம் குறித்து தலைமைக்கு பி.டி.ஆர் தெரிவித்ததுடன், தலைமையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆளும் தி.மு.க.விற்குள் ஏற்பட்ட உள்கட்சி பூசலால்  நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், கட்சியின் ஐடி பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. 

“நிதித்துறை அமைச்சரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்கிறது. கூடுதலாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் மற்றும் பின்பற்றுதல்கள் உள்ளது. கடந்த வாரம், கட்சிப் பதவியை விட்டுக்கொடுக்கும் எண்ணம் குறித்து தலைமைக்கு பி.டி.ஆர் தெரிவித்ததுடன், தலைமையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக 2017-ம் ஆண்டு முதல் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வந்தார். பணிச்சுமையை காரணம் காட்டினாலும் உட்கட்சி பூசலே அவர் பதவியை ராஜினாம செய்ய காரணம் என்று கூறப்படுகிறது.
 
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வந்த கோவை மகேந்திரனை, பிடிஆரின் ஐடி டீமிலேயே நியமித்தது திமுக. மகேந்திரனுக்கு திமுக ஐடி விங்க் அணியின் மாநில இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. திமுகவின் ஐடி விங்க் செயலாளராக பிடிஆர் இருந்தபோதிலும், அவரது பணி சுமையை குறைக்கும் பொருட்டு மகேந்திரனை நியமித்தது. ஆனால் அவரை நியமித்தது பிடிஆருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டையும் பிடிஆர் விரும்பவில்லை. இதுபோன்ற காரணங்களுக்காகவே தன் பதவியை ராஜினாமா செய்ய பிடிஆர் தயாராணதாகவும், ஆனால், அந்த ராஜினாமா பற்றி திமுக மேலிடம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மேலும் கட்சி சார்பில் அந்த பதவிக்கு புதிய நபரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன்படி திமுகவின் அடுத்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மூன்று முறை மன்னார்குடியிலிருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ள அவர் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், ஸ்டாலினின் மருமகன் திமுக ஐடி விங்கை கவனித்துக்கொள்ள 20 பேர் கொண்ட ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தக் குழுவே நாடாளுமன்றத் தேர்தலையும் கவனிக்கும். பிரஷாந்த் கிஷோரிடம் சில நுணுக்கங்களை கற்றுள்ள சபரீசன் அதன் மூலம் சில விஷயங்களை செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதன்முதலாக அதிமுக கட்சி தொடங்கியது. 2014-ம் ஆண்டு அதிமுக இதை தொடங்கியது. அதன்பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அந்தக் கட்சி சிறப்பான வெற்றியை பெற்றது. அதன்பின்னர் திமுகவும் 2017-ம் ஆண்டு தங்களுடைய தகவல் தொழில்நுட்ப அணியை தொடங்கியது. அப்போது முதல் அந்த அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வர இந்த தொழில்நுட்ப பிரிவும் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. எனினும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தொழில்நுட்ப பிரிவில் அதிக கவனம் செலுத்தவில்லை. எனவே இந்தப் பிரிவிற்கு புதியவரை செயலாளராக நியமித்து மீண்டும் அதன் முழு செயல்பாட்டை பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

click me!