9 கேள்வி கேட்டதற்கு பதிலா நேரடியா 5 கோடி கேட்டிருக்கலாம்.. அன்புமணியை கலாய்க்கும் வன்னி அரசு.

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2021, 3:23 PM IST
Highlights

அன்புமணியின் 9 கேள்விகளை கேட்டு கடிதம் எழுதியதற்கு பதிலாக நேரடியாகவே சூர்யாவிடம் 5 கோடி கேட்டிருக்கலாம், ஒட்டுமொத்தமாக பிளாக்மெயில் செய்கிற கட்சிதான் பாமக என்பது இதில் இருந்தே தெரிகிறது.

பாமக என்பது ஒரு பிளாக்மெயில் கட்சி என்றும், அம்பேத்கரை குறிக்கும் ஜெய் பீம் என்ற பெயரில் வந்துள்ள இந்த திரைப்படத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுவில்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றஞ்சாட்டியுள்ளார். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடி இணையத் தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்..  இருளர் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் வேண்டுமென்றே வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் அவர்களின் அடையாள குறியான அக்னிசட்டி இடம்பெற்றுள்ளது என்றும், அதேபோல் வில்லனாக வரும் காவலருக்கு திட்டமிட்டு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்  என்றும் வலியுறுத்தி வருவதுடன்,  5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கினால் மட்டும் போதாது, சூர்யா வன்னியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க ஆகவேண்டும், இல்லாவிட்டால் அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாமகவினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்சூர்யாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு, பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர்,  

மருத்துவர் ராமதாஸ் அவர்களுடைய அரசியல் போக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நடவடிக்கைகள், அதன் செயல்பாடுகள் என்பதும் பிளாக்மெயில் பாலிடிக்ஸ்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு ஒரு உதாரணத்தை என்னால் கூறமுடியும், முதன்முதலில் ரிலையன்ஸ் தமிழகத்தில் திறக்கப்பட்டபோது, அந்த நிறுவனம் இனி ஒரு இடத்தில் கூட இருக்காது, அதை அடித்து நொறுக்குவோம் என்று கூறினார். அதற்காக கடுமையான அறிக்கைகளையும் வெளியிட்டார். ஆனால் ஒரு வார காலத்திற்குள்ளாகவே பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டார். அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போதும், அடக்குமுறைக்கு எதிராக ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு சமூகம் எழுந்து வருவதை அவர் விரும்புவது இல்லை. இந்த ஜெய்பீம் திரைப்படத்தில் அந்த குறிப்பிட்ட காட்சி வன்னியர்களை உறுத்துகிறது என்றால் அதை வன்னியர்களே நம்ப மாட்டார்கள். அதற்கு காரணமாக குருமூர்த்தியை கூறுகின்றனர். குரு அவர்கள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாற்றுக்கருத்து உள்ளது. ஆனாலும் அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொஞ்சம்  பணம் கொடுத்து உதவி இருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும், இதை நான் சொல்லவில்லை  காடுவெட்டி குரு அவர்களின் குடும்பத்தினரே சொல்கிறார்கள்.

அப்படியெனில் ஜெ.குரு மீது அவருக்கு அக்கறை இருந்திருந்தால் அன்றே மருத்துவமனையில் பணம் செலவழித்து அவரின் உயிரை காப்பாற்றி இருப்பார். ஆனால் அப்படி எந்தவித அக்கறையும் அவருக்கு இல்லை என்பதே குரு குடும்பத்தினரின் கருத்து. முதலில் வன்னியர் சங்கம் சார்பில் பு.த அருள்மொழி அறிக்கை கொடுத்தார்,  அதற்கு சூர்யா பக்கம் இருந்து எந்த தகவலும் இல்லை, அதைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை கொடுத்தார், அதற்கு வந்த பதில் அனைவருக்கும் தெரியும், ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், விடுதலை சிறுத்தை தலைவரும் அனுப்பிய அறிக்கைக்கு சூர்யா அவர்கள் உடனே பதில் எழுதுகிறார். 

அன்புமணியின் 9 கேள்விகளை கேட்டு கடிதம் எழுதியதற்கு பதிலாக நேரடியாகவே சூர்யாவிடம் 5 கோடி கேட்டிருக்கலாம், ஒட்டுமொத்தமாக பிளாக்மெயில் செய்கிற கட்சிதான் பாமக என்பது இதில் இருந்தே தெரிகிறது. இந்த படத்தில் குருவின் பெயர் வைக்கப்பட்டதால் அவர்களுக்கு உறுத்தவில்லை, இந்த படத்திற்கு ஜெய்பீம் என பெயர் வைத்ததால் அவர்களுக்கு உறுத்துகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இது போன்ற  ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையை சமூகத்திற்கு எடுத்துக்கூறும்  திரைப்படங்களில் நடிக்க சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் இப்போதுதான் முன்வருகின்றனர். ஆனால் அப்படிப்பட்டவர்களை இப்போதே மிரட்டி விரட்டிவிட வேண்டும் என்று பார்க்கிறார்கள். அரசு தலையீட்டு நடிகர் சூர்யா அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!