தலிபான்களிடமிருந்து தூதரகத்தை பாதுகாத்த மோப்ப நாய்கள்.. பத்திரமாக நாடு திரும்பின.. முழு விவரம் உள்ளே..

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2021, 5:04 PM IST
Highlights

காபுலில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன, காபூலில் உள்ள  பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் கடந்த 3 ஆண்டுகளாக இவைகள் திறம்பட செயல்பட்டன. 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அங்குள்ள இதர 4 இந்திய தூதரகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவப் படையினர் கே-9  பிரிவைச் சேர்ந்த மூன்று மோப்ப நாய்கள் இந்தியா திரும்பியுள்ளன. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து அங்கு அசாதாரன சூழல் நிலவுவதால் துணை ராணுவ படையினருடன் மோப்ப நாய்களும் நாடுதிரும்பியுள்ளன.

ஆப்கனிஸ்தான் ராணுவத்திற்கும் இஸ்லாமிய அடிப்படைவாத தலிபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில் வார் நடைபெற்று வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல், முக்கிய நகரங்களான கந்தகார், ஜலாலாபாத் போன்ற  நகரங்களை தலிபான்கள் கைப்பற்றினர். நிலைமை கைமீறிச் சென்றதை உணர்ந்த  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். அவர் கஜகஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலிபான்கள் பிடியில் நாடு சிக்கியுள்ளதால், 20 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்த ஆப்கன் மக்கள் உயிர் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் சூன்ய காடாக மாறியுள்ளதால், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்களது தூதரகங்களை இழுத்து மூடிவிட்டு தங்கள் அதிகாரிகளை விரைவாக நாட்டுக்கு மீட்டுச் செல்வதில் தீவிரம்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தலிபான்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட இந்தியாவும் தூதரக அதிகாரிகளை பத்திரமாக நாட்டிற்கு திரும்ப அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல், மற்றும் அங்கு பிற நகரங்களில் அமைந்துள்ள இதர 4  இந்திய தூதரக அதிகாரிகள், மற்றும் அதில் பணியாற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக ஊழியர்கள் போன்றோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட துணை ராணுவ படை கமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களுடன் அதி திறன்மிக்க கே-9 இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த மாயா, ரூபி மற்றும் பாபி ஆகிய 3 மோப்ப நாய்கள் ஈடுபட்டிருந்தன. இந்த நாய்கள் மூன்றும், பஞ்ச்குலா விலுள்ள  நாய்களுக்கான தேசிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவைகள் ஆகும்.

காபுலில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன, காபூலில் உள்ள பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் கடந்த 3 ஆண்டுகளாக இவைகள் திறம்பட செயல்பட்டன. தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்தய தூதரகத்தையும் நமது ஊழியர்களையும் இந்த நாய்கள் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து கொண்டன. அங்கு நிலைமை தலைகீழாக மாறிய நிலையில்,   திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்திய விமானப்படை ஐஏஎஃப் விமானத்தின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா தனது தூதரக மற்றும் அனைத்து ஊழியர்களையும் நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்தது.

அதில் இந்திய மோப்ப நாய்கள் மாயா, ரூபி மற்றும் பாபி ஆகிய மூன்று மோப்ப நாய்களும் ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பின. 150 க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்களுடன் 3 நாய்களும் விமானத்தில் அழைத்து வரப்பட்டன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்த ஒரு மூத்த அதிகாரி ஒருவர், கமாண்டோக்கள் தங்கள் தனிப்பட்ட ஏ.கே தொடர் தாக்குதல் ஆயுதங்கள், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள், ஹெல்மெட், கம்யூனிகேஷன் கேஜெட்டுகள், வெடிமருந்துகள் மற்றும் மூன்று மோப்ப நாய்களையும் திரும்ப கொண்டுவந்துள்ளோம் என்றார். காபுல் ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தியா விமானம், குஜராத் மாநிலம் ஜாம் நகர் விமான தளத்தில் பத்தரமாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. 
 

click me!