
தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவதையும் கண்மூடித்தனமாக தாக்குவதையும் கைது செய்வதையும் இலங்கைக் கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது. இலங்கை கடற்படைதான் தமிழக மீனவர்களை துன்புறுத்துகிறது என்றால், இந்திய கடலோர காவல்படை, ராமேஸ்வர மீனவர்களை இந்தியில் பேச வற்புறுத்தி தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலை பிச்சை என்பவருக்கு சொந்தமான படகில், அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த அவர்களின் வலைகளை, இலங்கை கடற்படையினர் அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணி அளவில், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் வந்த வீரர்கள், ஜெபமாலை பிச்சையின் படகினை நிறுத்துமாறு கூறியுள்ளனர். பாய்ச்சியிருந்த வலைகளை எடுப்பதற்காக படகை நிறுத்தாமல் சென்றதால், கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், அந்தோணிபிச்சையின் இடது முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறியுள்ளது. மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மீனவர்களிடம் இந்திய கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மீனவர்கள் தமிழில் பதிலளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கடலோர காவல்படையினர், மீனவர்களை இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ பேச சொல்லி தாக்கியுள்ளனர்.
அதன்பின்னர் சிறிதுநேரம் கழித்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருட்டி விட்டதால் மீண்டும் பிரச்சனை ஏதும் வரக் கூடும் என கருதி கடலிலேயே இரவு முழுவதும் இருந்து விட்டு இன்று காலை கரைக்கு திரும்பினர். இதையடுத்து காயம் அடைந்த மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படைதான் தமிழக மீனவர்களை தாக்குகிறது என்றால், மீனவர்களைக் காக்க வேண்டிய இந்திய கடலோர காவல்படையே, இந்தியில் பேச சொல்லி தாக்கியதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதும் மீனவர்களிடையே கொந்தளிப்பையும் நாடு தழுவிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.