ஆக்சிஜன் இன்றி மூச்சு முட்டும் இந்தியா... கடும் நெருக்கடியிலும் அடிச்சுத்தூக்கும் தமிழகம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 26, 2021, 11:48 AM IST
Highlights

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது என்பதை தமிழக அரசும் உணர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்காகவும் பிற நோய்களுக்காகவும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காததால் கடுமையான நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருக்கிறது.

இதனால் பல இடங்களிலும் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடும் நாட்டின் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஆனால், இந்த நெருக்கடியான கட்டத்திலும், பிற மாநிலங்களுக்கு எந்த பிரச்னையுமின்றி தமிழகம் ஆக்சிஜன் தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது என்பதை தமிழக அரசும் உணர்ந்துள்ளது.

​​தமிழகத்தில் நாள்தோறும் 400 மெட்ரிக் டன் வரை மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி பெரும்பாலும் தனியார் நிறுவனங்களிம் மூலமே பெறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி 240 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதிகப்படியான ஆக்சிஜன் மாநிலம் முழுவதும் உள்ள 1200 மெட்ரிக் டன் வரையிலான சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது.

தமிம்நாட்டில் ஐநாக்ஸ் ஏர், பிராக்சேர் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இதில் ஐநாக்ஸ் ஏர் நிறுவனத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சேலத்தில் தொழிற்சாலைகள் உள்ளன. சேலத்தில் தொழிற்சாலைக்குத் தேவையான ஆக்சிஜனே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சேலத்திலும் திரவ மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திரவ ஆக்சிஜனை நேரடியாக நோயாளிகளுக்குக் கொடுக்க முடியாது. அதை அதிக அழுத்தத்தில் ஆவியாக்கிய பின்னரே, நோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஐநாக்ஸ் நிறுவனத்தால் 140 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடிந்தாலும்கூட, அந்நிறுவனத்தால் 11.5 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மட்டுமே கம்பிரஸ் செய்து நோயாளிகள்ககு வழங்கும் வகையில் மாற்ற முடியும். கேரளாவின் காஞ்சிகோட் என்ற பகுதியில் உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜனும் கோவை, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது வரை தேவைக்கு ஏற்றபடியே திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும் என ஐநாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல பிராக்சேர் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களும் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இந்த மூன்று நிறுவனங்களைத் தவிர, தஞ்சை மற்றும் கோவை மாவட்டங்களில் அமைந்துள்ள மற்ற சில தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்படுவதாகச் சுகாதார துறை தெரிவித்துள்ளது. அதேபோல புதுவையில் உற்பத்தி செய்யப்படும் 120 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலையால் தமிழகம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போதே அடுத்த அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளைத் தமிழக சுகாதார துறை அதிகாரிகள் எடுக்கத் தொடங்கிவிட்டனர். மாநிலம் முழுவதும் சேமிப்பு இடங்களின் ஆக்சிஜன் சேமிப்பு இடங்களின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டன. திடீரென மாநிலத்தில் அவசர நிலை ஏற்படும்போது, அதைச் சமாளிக்கும் வகையில் ஆக்சிஜன் சேமிக்கும் திறன் அதிகப்படுத்தப்பட்டது.

click me!