இந்தியர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை ! குடியுரிமைச் சட்டம் குறித்து மோடி உறுதி !!

Selvanayagam P   | others
Published : Dec 17, 2019, 07:47 AM IST
இந்தியர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை ! குடியுரிமைச் சட்டம் குறித்து மோடி உறுதி  !!

சுருக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.  

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர்பக்கத்தில்,  குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டமானது, நூற்றாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் ஏற்புடைமை, நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் சார்ந்த கலாசாரத்தை விளக்கும் வகையில் உள்ளது.

இந்தியாவின் எந்த மதத்தை சேர்ந்தவருக்கும் இந்த சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை எனது சக குடிமக்களுக்கு ஐயப்பாடின்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

பல ஆண்டுகளாக வெளியே துன்புறுத்தலுக்கு ஆளாகி வருபவர்களுக்கும், இந்தியாவை தவிர வேறு செல்லுமிடம் இல்லாதவர்களுக்காகவுமே இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

விவாதம், எதிர்ப்பு போன்றவை ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான். ஆனால் பொது சொத்துகளை சேதப்படுத்துவது, இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு நமது பண்பாட்டில் இடமில்லை. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சில சுயநல சக்திகள் நம்மை பிளவுபடுத்தி, இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை அனைவரும் காக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சிக்காகவும் குறிப்பாக ஏழைகளின் நல்வாழ்வுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டிய நேரம் இது. எனவே புரளிகளுக்கும், தவறான தகவல்களுக்கும் செவிகொடுக்காமல், அவற்றை ஏற்படுத்துவோரிடம் இருந்து தள்ளி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!