
சென்னையில் ஜெயா தொலைக்காட்சி, விவேக் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நாளையும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையை சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முதல் நாளில் 40 இடங்களில் சோதனை நடந்து முடிந்தது. முடிவில் ஜெயா டிவி அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை 40 முதல் 50 இடங்கள் வரையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த சோதனை முடியும் வரையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கோவையில் 7 இடங்களில் காலை 9மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில் 4 இடங்களில் சோதனை நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். 36 மணிநேரம் வரையில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் அமைந்துள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்களில் நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அலுவலகங்களிலும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் மன்னார்குடியை அடுத்த சுந்தரக் கோட்டையில் உள்ள திவாகரன் வீட்டில் நடைபெற்று வந்த சோதனையும் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நாளையும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது