
வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் தங்கள் குடும்பத்தை இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் பழி வாங்கத் துடிக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ள டி.டி.வி.தினகரன், தற்போது ஒன்றரைக் கோடி தொண்டர்கள் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவின் இல்லத்திலேயே சோதனை நடத்தியிருப்பது, கர்ப்பகிரகத்திலேயே சோதனை நடத்தியிருப்பதைப் போன்று உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போய்ஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் வருமானவரித்துறையினரின் நடத்திய அதிரடி ரெய்டு அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அதிமுகவின் துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்..? என தெரிவித்திருந்தார்.
போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள் என்று தனது அடுத்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்றும் தொடர்ந்து குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரனன், தற்போது மதிமுக தொண்டர்களை ஏமாற்றும் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும், இந்த அரசுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வரவதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவின் இல்லத்திலேயே இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதற்கு அவர்கள் காரணமாகியிட்டார்கள் என தெரிவித்தார்.
நாங்கள் அனைவரும் தெய்வமாக மதிக்கும் ஜெயலலிதாவின் இல்லத்திலேயே நடக்கும் இந்த ரெய்டு கர்ப்பகிரகித்திலேயே நடத்தும் ரெய்டு போன்றது எனவும் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார்.