
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் பங்களாவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில், 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அது போல் தினகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டி.வி. பழைய அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் வேளச்சேரி பீனிஸ்க் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், பெங்களூருவில் அதிமுக அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, மன்னார்குடி திவாகரன் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த திநகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதும் ஓய்வெடுக்கச் செல்லும் கோடநாடு எஸ்டேட் பங்களா மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களையும் விட்டு வைக்காத வருமான வரித்துறையினர் அங்கும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் வருமானம் பற்றிய முறையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.