
கோயம்புத்தூர்
தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பாஜகவும், அதற்கு வால்பிடிக்கும் அதிமுகவும் தூக்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கோயம்புத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. விளாசினார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க, சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று கோயம்புத்தூர், டாடாபாத்தில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியது:
“உடல் நலமில்லாமல் உள்ள கலைஞரை பார்க்க பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கு வந்து நலம் விசாரித்து விட்டுச் சென்றதால் பா.ஜ,க-வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என்று அனைவரும் கேள்வி எழுப்பினர். ஆனால், உறவுக்கு கைக் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்! என்ற வழியில் வந்த தி.மு.க. திட்டமிட்டவாறு பண நீக்க நடவடிக்கையை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
கடந்தாண்டு இதே தேதியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், “ரூ.5 இலட்சம் கோடி கருப்பு பணம் இருக்கிறது மற்றும் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது” என்றார்.
ஆனால், புழக்கத்தில் இருந்த 99 சதவீத ரூபாய் நோட்டுகளும் வங்கிக்கு வந்து விட்டன. அப்படியென்றால் கருப்பு பணம் இல்லை என்றுதானே அர்த்தம். பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் நாள் கணக்கில் மக்கள் வங்கி மற்றும் ஏ.டி,எம். வாசல்களில் காத்திருந்தனர். இதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.
பண நீக்க நடவடிக்கையினால் நாடு முழுவதும் 100 பேருக்கு மேல் உயிரிழந்தனர். சாதாரண மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கூட கிடைக்காத நிலையில் சேகர் ரெட்டியிடம் மட்டும் ரூ.9 ஆயிரம் கோடிக்கு இரண்டாயிரம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்கு மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தது?
அப்படியென்றால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் அதை வெள்ளையாக்கி விட்டார்களா? எனவே, மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்குத் தான் உதவியதே தவிர ஏழை, நடுத்தர, தொழில் துறையினருக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது. தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. உள்கட்சி பூசலை சமாளிப்பதற்குதான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. எப்போது இந்த ஆட்சி போகும் என்று மக்கள் கேட்கிறார்கள்.
விளம்பரத்திற்காக மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதனால் சாதாரண மக்களுக்கு எந்த பலனும் கிடையாது. எனவே, இனியாவது மத்திய அரசு இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு எதிரான பா.ஜ.க ஆட்சியும், அதற்கு வால் பிடித்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக அரசும் தூக்கி எறியப்படகூடிய நாள் வெகுதொலைவில் இல்லை” என்று அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் இரா.தமிழ்மணி, சி.ஆர்.ராமச்சந்திரன், தி.மு.க. உயர் மட்ட குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், தி.மு..க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி, சிங்கை ரவி, பொதுக்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுசந்தரம்,
பையா கௌண்டர், திராவிட மணி, வெங்கடேஷ், வக்கீல் அருள்மொழி, கோட்டை அப்பாஸ், பூபாலன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், பிரேம், பிரிமியர் செல்வம் மற்றும் வடிவேல்,
பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சாந்தகுமார், ரகுபதி, துரைசிங், அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மைய நிறுவன தலைவர் சி.எம்.ஸ்டீபன்ராஜ், கரோலின் விமலா ராணி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.